'ஆடி' யது போதும்; அடக்கமே ஆளும்.!
 

‘Audi’ is enough; Humility rules.!

தமிழில் உள்ள பன்னிரண்டு மாதங்களில், ஆடி மாதத்திற்கு என, ஒரு தனிச்சிறப்புண்டு.

அம்மன் அருள் :

ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாகத் தொடங்குகின்றன. 

இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும், களை கட்டித்தொடங்கி விடும். 

அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். 

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் விசேஷமானவை.

அதாவது, விரதம் இருந்து, எண்ணெய் தேய்த்து, குளித்து அம்பாளை வழிபட்டால், மாங்கல்ய பலம் கூடும்.

முன்னோர் வழக்கு :

ஆடி வெள்ளி வழிபாடு செய்வது, சகல பாக்கியங்களையும் அள்ளித் தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு, திருமண பாக்கியம் கூடிவரும். 

அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல், என இந்த மாதம் முழுவதும், பக்தி மார்க்கத்தில் மூழ்கித் திளைப்பார்கள் தமிழ் மக்கள். 

ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடி பௌர்ணமி, ஆடிப்பெருக்கு என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. 

இதில்,  ஆடி அமாவாசை முக்கியமானது. அன்றைய தினம் கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோருக்கு, திதி கொடுப்பது  சிறப்பு.

மாங்கல்யம் :

ஆடி மாதத்தின் 18-வது நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடப்படுகிறது. 

இந்நாளில், பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிவார்கள். ஆடிப்பூரம் ஆண்டாள் அவதாரம் செய்த திருநட்சத்திரம்.

இத்தனை சிறப்புகள்மிக்க, ஆடி மாதத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்கக்கூடாது, செய்யக் கூடாது என்று கூறுவார்கள். 

ஏனென்றால், இந்த ஆடி மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் என மாறி மாறி வந்துகொண்டே இருக்கும்.

ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியிருப்பதால், மற்ற காரியங்களில், விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமம்.

 விரதம் :

இறைவனை
துதிப்பதற்கும், அவன் சிந்தனையாகவே ஆன்மீக தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும்,

இடையூறாக, மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே
மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படுகிறது.

மேலும், மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளன. 

இதில், தஷ்ணாயணம் ‘புண்ணிய காலம்’ ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது.

முன்னோர் வகுத்ததை,
இன்றைய விஞ்ஞான உலகில் முறையாக வகுத்து வாழ்தல் சிறப்பாகுமே.!

ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமில்லை. முருகப் பெருமானுக்கும் உகந்த மாதம்.

ஆடி கிருத்திகை அன்று, முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்துக் கோவில்களிலும் விழாக்கோலம் காணும். 

எனவே, ஆடி மாத சிறப்பு நாட்களில் விரதம் கடைப்பிடித்து இறைவழிபாட்டில் ஈடுபட்டால், வளமான வாழ்வு நிச்சயம் கிடைக்கும்' என்பது ஐதீகம்.

Share this story