கும்பகோணத்தில் 8-ந்தேதி மாசிமகம் : 10 நாள் திருவிழா தொடக்கம்

By 
க்ஸ்
கும்பகோணத்தில் 8-ந்தேதி மாசிமகம் : 10 நாள் திருவிழா தொடக்கம்

கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில், ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். 

இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாக கொண்டாடப்படுகிறது. 

மாசிமக திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் கோவில்கள் மற்றும் வைணவ கோவில்களில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் விழா நடைபெறும்.

அறுபத்து மூவர் வீதி உலா :

இந்த ஆண்டு மகாமகம் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், காளகஸ்தீஸ்வரர் கோவில், சோமேஸ்வரர்கோவில், அபிமுகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் வருகிற 8-ந் தேதி மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 11-ந் தேதி அறுபத்து மூவர் வீதி உலாவும், 12-ந் தேதி ஓலைச்சப்பரமும், 15-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

தேரோட்டம் :

17-ந் தேதி மகாமக குளத்தில் காலை 12 மணி முதல் 1 மணிக்குள் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 

இதேபோல், அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், கவுதமேஸ்வரர் கோவில்களின் சார்பில் வருகிற 16-ந் தேதி மாலை மகாமக குளக்கரையில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதேபோல், கும்பகோணம் பகுதியில் உள்ள வைணவ கோவில்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி கோவில், ராஜகோபாலசுவாமிகோவில், ஆதிவராக பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வருகிற 9-ந் தேதி பத்து நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தெப்ப உற்சவம் :

தொடர்ந்து 12-ந் தேதி கருட வாகனத்தில் ஓலைச்சப்பரமும், 17-ந் தேதி காலை 7 மணிக்கு சக்கரபாணி கோவில் தேரோட்டமும் நடக்கிறது. தொடர்ந்து 12 மணியளவில் காவிரி ஆற்றங்கரை சக்கர படித்துறையில் வைணவ கோவில்கள் சார்பில் தீர்த்தவாரி நடக்கிறது.

மாசிமகத்தையொட்டி, சாரங்கபாணி கோவிலில் வரும் 17-ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.
*

Share this story