900 ஆண்டு பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் கோவில் : மாணிக்கவாசக விழா பாரீர்..

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே, நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தர நாயகி சமேத அக்னீஸ்வரர் கோவில் உள்ளது.
பரணி நட்சத்திர பரிகார தலமான இந்த கோவிலில், அக்னீஸ்வரருக்கு மேற்கு திசை நோக்கியும், சுந்தர நாயகிக்கு தெற்கு திசை நோக்கியும் சன்னதிகளுக்கு செல்ல தனித்தனியாக இரண்டு வழிகள் உள்ளன.
இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோவிலில், உள்ள நல்லாடை அக்னீஸ்வரர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்வாழ்வை அளிப்பார் என்பது ஐதீகம்.
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரருக்கு வடபகுதியிலும், பரசலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்துக்கு தென்புறத்திலும், இந்த கோவில் அமைந்துள்ளது.
வரலாறு :
சோழ வள நாட்டை, பல மன்னர்கள் ஆண்டு வந்தபோதும் இரண்டாம் குலோத்துங்க சோழரின் புதல்வரான இரண்டாம் ராஜராஜ சோழன் கி.பி. 1146-ம் ஆண்டு முதல் 1163-ம் ஆண்டு வரை இந்த பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளார்.
இதனால், நல்லாடை என தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் முற்காலத்தில் 'ஜெயங்கொண்ட சோழ வளநாட்டில் நல்லாடை மங்கள குலோத்துங்க சோழபுரம்' என்று அழைக்கப்பட்டு உள்ளது.
இந்த கோவிலின் கருவறை கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
சிவபெருமானின் மனைவியான உமையவளின் சாபம் பெற்று ஒளியை இழந்த அக்னிபகவான் சிவனை போற்றி பணிந்து மனமுருகி வேண்டினார்.
அப்போது, சிவபெருமான் எழுந்தருளி இத்தலத்தின் தெற்கே இருக்கும் தீர்த்தத்தில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடினால், இழந்த ஒளியை மீண்டும் பெறுவாய்' என்றார்.
அதன்படி, இந்த கோவில் குளத்தில் நீராடி அக்னி பகவான் இழந்த ஒளியை மீண்டும் பெற்றதால், இந்த கோவில் குளம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
மாணிக்கவாசக விழா :
மேலும், இங்குள்ள இறைவன் அக்னீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
வைகாசி விசாக விழாவும், மார்கழி மாதத்தில் திருவாதிரை விழாவும், திருவாதிரை விழாவின்போது மாணிக்கவாசக பெருமானை அலங்கரித்து விழாவாக ஊர்வலம் நடத்துவதும் வழக்கம்.
*