62 ஆண்டுகளுக்குப் பிறகு, வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி : பக்தர்கள் பெருமகிழ்ச்சி

மதுரை மாநகரில், தொன்று தொட்டு நடந்து வரும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி 16-ந் தேதி நடக்கிறது.
அன்று, ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
அதன்பின், கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாக்கோலம் :
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கியபின் அன்றைய இரவு வண்டியூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் எழுந்தருள்வார். அப்போது, வண்டியூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
வண்டியூர் வைகை ஆற்றின் நடுவில் தேனூர் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அழகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுவது வழக்கம்.
பிரசித்தி பெற்ற இந்த மண்டபம் பராமரிப்புகள் இல்லாததாலும், வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் காலப்போக்கில் சிதிலமடைந்தது. இதனால், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேனூர் மண்டபம் வைகை ஆற்றின் நடுவே காட்சிப் பொருளாகவே இருந்து வந்தது.
இதனால், இந்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.
சீரமைப்பு :
இந்நிலையில், அரசு உத்தரவுப்படி வண்டியூர் தேனூர் மண்டபம் ரூ.40 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மண்டபத்தில் கள்ளழகரை எழுந்தருளச் செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
பரிட்சார்த்த முறையில் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும் கருட வாகனம் கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஏற்றி இறக்கி பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரீட்சார்த்த முறை வெற்றி பெற்றதை தொடர்ந்து, வருகிற 17-ந் தேதி தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளுவார் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
62 ஆண்டுகளுக்கு பிறகு, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளுவது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.