தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில், இன்று தீர்த்தவாரி; தெப்ப உற்சவம்..

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்புவில் பிரசித்திபெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்தார்.
அதன்படி, அன்ன வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி, தாடிக்கொம்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருக்கல்யாணம் :
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 10-ந்தேதி ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சவுந்தரராஜ பெருமாளுக்கும், சவுந்தரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பின்னர் பெருமாள், தேவியர்களுடன் பல்லக்கில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடைபெற்றது. மாலை 5 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது.
தெப்ப உற்சவம் :
தேரோட்ட நிகழ்ச்சியில் திண்டுக்கல், கரூர், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது கோவிந்தா... கோவிந்தா... என விண்ணதிர கோஷம் எழுப்பியபடி, பக்தர்கள் பக்திப் பரவசத்தில் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்த தேர், இரவு 7.30 மணி அளவில் நிலையை வந்தடைந்தது.
முன்னதாக, திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.
திருவிழாவில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தவாரியும், மாலை தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
*