கோவை, தண்டு மாரியம்மன் கோவில் 13 நாள் திருவிழா : 1000 தீச்சட்டி ஏந்தும் 'சக்தி கிரகம்'..

கோவை, காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து அவினாசி சாலையில், ஒன்றரைக் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தண்டு மாரியம்மன் கோயில்.
முகப்பில், அழகிய மூன்று நிலை ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும், மகா மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம். அடுத்துள்ள அர்த்தமண்டப நுழைவாயிலில் துவாரபாலகிகள்.
இன்முக அருள் :
கருவறையில், அன்னை தண்டு மாரியம்மன் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த நிலையில், புன்னகை தவழும் இன்முகத்துடன் அருட்பாலிக்கிறாள்.
மேல் இரண்டு கரங்களில் கதையையும், கத்தியையும் தாங்கி, கீழ் கரங்களில் சங்குடனும், அபய முத்திரையுடன் திகழ்கிறாள்.
இடதுகாலை மடித்து, வலதுகாலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறாள்.
சிறப்பு பூஜைகள் :
இந்த தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும், சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அன்று, பூச்சாட்டுடன் தொடங்கப்படுகிறது.
13 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது, அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நான்காம் நாள் மற்றும் எட்டாம் நாள் திருவிழா பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை.
சக்தி கிரகம் :
இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம், ‘சக்தி கரகம்.’ அன்று காலை 6 மணிக்கு கோவை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள கோனியம்மன் திருக்கோயிலிலிருந்து `சக்தி கரகம்' புறப்படும்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரங்களில் தீச்சட்டி ஏந்தி, சக்தி கரகத்துடன் பக்தி பரவசத்துடன் வருவார்கள். மனம் சிலிர்க்க வைக்கும் காட்சி இது.
11-வது நாளன்று காலை 6 முதல் இரவு 8 மணி வரை தமிழ் முறை லட்சார்ச்சனை நடக்கும். அன்று அன்னைக்கு பலவிதநறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து, பலவகை மலர்களால் அன்னைக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.
தன்னை நம்பும் பக்தர்களுக்கு நல்லருள் புரிந்து, பக்தர்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்கும் தடைகளை தகர்த்தெறிந்து நல்வாழ்வு அருள்கிறாள்.