மகா சிவராத்திரியில், தேரோட்ட நிகழ்ச்சி பார்க்க வா..!

By 
siva2

இராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில், இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. 

இதைத் தொடர்ந்து, தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருவிழாவின் 7-வது நாளில், காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

தொடர்ந்து மாலை 5 மணிக்கு சுவாமி - அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவிழாவின் 8-வது நாளான் நேற்று சாமி-அம்பாள் தங்க கேடயத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்தில் மேலத்தெரு மண்டக படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு, இன்று (1-ந்தேதி) காலை 8.40 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. 

அதுபோல், மாசி மகா சிவராத்திரி அன்று நாளை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் ஒரு மணி மற்றும் இரவு 8 மணிக்கும் மூடப்படாமல் பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் மகா சிவராத்திரி அபிஷேகம் மற்றும் தரிசனத்தையும் காண அனுமதிக்கப்படுவார்கள். 

இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
*

Share this story