சாணத்தின் மேல் பூசணிப்பூ வைப்பது எதற்காக தெரியுமா?

By 
margali

மார்கழி மாதம், வைகறைப் பொழுதில் வீட்டின் முற்றம் அழகு. இதில், மறைபொருளாய் அமைந்திருக்கும் சில கேள்விகளுக்கு, விளக்கம் பார்க்கலாம்..

"பெண்கள் அதிகாலையில் கோலமிடுவதன் தத்துவம் என்ன?"

"எந்த மனிதரும் தவறுகள் செய்யாமலில்லை. அறிந்து செய்யும் தவறுகள் ஒரு பக்கம், அறியாமல் செய்யும் தவறுகள் மறுபக்கம். நடக்கும்போது, நம் காலடிபட்டு எறும்பு, பூச்சி போன்ற எத்தனை உயிர்கள் சாகின்றன? இதுவும் ஒருவகை பாவம்தானே?

இதனால் எழும் தோஷத்தினால் கன்னிப் பெண்களுக்கு திருமணத்தில் தடை வரும். இதைத் தவிர்க்கவே பெண்கள் வாசலில் அரிசி மாவினால் கோலம் போடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது.

மழையினால் உணவுக்கு வழியின்றி இரவு முழுவதும் அடைந்து கிடக்கும் சிறு உயிரினங்கள், அதிகாலையில் வெளிவந்து தமக்குத் தேவையான உணவாக அரிசி மாவைத் தேடி வந்து உண்ணும். அந்த உணவினை சிறு உயிரினங்களுக்கு அளித்த பெண்களுக்கு, தோஷங்கள் அகலும்.''

''மார்கழிக் கோலத்தில் சாணம் வைப்பது ஏன்?"

''பசு மாட்டின் சாணம் அற்புத பலன்களைத் தரும் ஒப்பற்ற கிருமிநாசினி என்பது உலகளவில் பல அறிவியல் வல்லுநர்களும் ஒப்புக்கொண்ட உண்மை. நம் வீட்டைச் சுற்றிப் பரவியிருக்கும் பாக்டீரியாவை அழிக்கும் சக்தி கொண்டது சாணம். கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களினால் நோய்த் தொற்றுகள் ஏற்படும். 

இதைத் தவிர்க்கவே சாணத்தில் மகாலட்சுமி உறைவதாகவும், சாணப் பிள்ளையார் பிடித்து வைத்தால் நல்லது என்றும் கூறி வாசலில் சாணத்தைக் கரைத்துத் தெளிப்பதை பழக்கமாக்கினர் முன்னோர்கள்.''

''சாணத்தின் மேல் பூசணிப்பூ வைப்பது எதற்காக?"

''இப்போது இருப்பதைப் போல சொந்தங்களையும், உறவுகளையும் தொலைத்து விட்டு, மேட்ரிமோனி- இணையதளங்களில் யாரும் அப்போது மாப்பிள்ளைத் தேடவில்லை. 

கல்யாணத்துக்கு தயாராகி நிற்கும் பெண்கள் இருக்கிற வீட்டு வாசலில் மட்டுமே மார்கழி மாதத்தில் கோலமிட்டு, நடுவே சாணத்தின் மீது பூசணிப்பூ வைப்பார்கள். தங்கள் வீட்டில் திருமணத்திற்கு பெண் தயாராகி இருக்கிறாள் என்பது குறிப்பால் உணர்த்துவது. அதனால் தான் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் கேட்டு செல்லும் பழக்கம் கை வந்தது. 

இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடைய நல்ல விஷயங்களை அடக்கிய மார்கழி மாதக் கோலங்களால் பெண்களின் கற்பனைத் திறன் வளர்வதுடன், யோகாவை செய்த பலனும் கிட்டும். ஒருமுக சிந்தனை ஏற்பட்டு அறிவும் கூர்மையாகும்.
*
 

Share this story