தமிழகத்தில், ரூ.5 கோடியில் வடிவமைக்கப்பட்ட 23 அடி உயர நடராஜர் சிலை..

By 
nata1

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை அருகே திம்மக்குடியில் உள்ள சிற்பச்சாலையை நடத்தி வருபவர் வரதராஜன். சிலைகள் வடிவமைப்பதில் கைதேர்ந்த இவர், கடந்த 2010-ம் ஆண்டு ஐம்பொன் உலோகங்களை கொண்டு ஒற்றை வார்ப்பு முறையில் 23 அடி உயர ஆனந்த தாண்டவ நடராஜர் சிலையை வடிவமைக்க முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டார். 

அதற்கான நிதி இல்லாததால் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 2012-ம் ஆண்டு வேலூர் நாராயண சக்தி பீடத்தின் ஒத்துழைப்போடு சிலை வடிவமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு 10 ஆண்டுளாக நடைபெற்று வந்தது. 

இந்த பணிகள் முடிவடைந்து கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்தநிலையில், ஆனந்த தாண்டவ நடராஜர் சிலைக்கு நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பீடம் தனியாகவும், திருவாச்சியுடன் சாமி தனியாகவும் கிரேன் உதவியுடன் பிரிக்கப்பட்டு 2 லாரிகளில் ஏற்றப்பட்டு வேலூர் பொற்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதுகுறித்து சிலையை வடிவமைத்த வரதராஜன் கூறுகையில், 

"23 அடி உயரமும், 17 அடி அகலமும், சுமார் 15 டன் எடையில் ரூ. 5 கோடி மதிப்பில் ஆனந்த தாண்டவ நடராஜர் சிலை 10 ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்டது. 

அந்தசிலை நீலத்தநல்லூர், தா.பழூர், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் சாலை வழியாக ஸ்ரீபுரம்(வேலூர்) ஸ்ரீ நாராயணி பீடம் பொற்கோவிலுக்கு சென்றடையும்' என்று தெரிவித்தார்.
*

Share this story