சனி தோஷமா? : இதோ சிறந்த பரிகாரம்..

shani

சனி பகவானை திருநள்ளாறு சென்றோ அல்லது அருகிலுள்ள ஆலயத்தில் அமைந்திருக்கும் நவக்கிரக சனியையோ வழிபட்டு, அவருக்கு மூன்று சனிக்கிழமைகள் தொடர்ந்து எள் சாதம் படைத்து, அதனை ஏழை- எளியவர்களுக்கும், வயதானவர்களுக்கும் தானமாக வழங்கலாம். இதனால் உங்களுக்கான சோதனைகள் மறைந்து மன அமைதி உண்டாகும்.

ஆஞ்சநேயர் மந்திரத்தை அனுதினமும் உச்சரித்து வருவதனாலும், சனி பகவானால் ஏற்படும் இடையூறுகள் அகலும். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி வணங்குங்கள். பெற்றோர் அல்லது அவர்களுக்கு இணையான அனுபவம் பெற்ற முதியவர்களிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆசிபெறுங்கள்.

சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தரிசித்து வருவதுடன், விஷ்ணு சஹஸ்ர நாமத்தை சொல்லி வழிபடுவதும் சிறப்பான பலன்களைத் தரும். ஊனமுற்றோருக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருவதாலும், சனியின் தாக்கம் குறையும்.

பொதுவாக சனி என்றாலே அனைவரும் பயப்படுகிறார்கள். 'எனக்கு ஏழரைச் சனி நடக்கிறது, எனக்கு அஷ்டமத்துச் சனி நடக்கிறது' என்று அச்சம் அடைபவர்கள் ஏராளம். ஆனால் பலர் நினைப்பதுபோல சனி பகவான் தீங்கிழைப்பவர் அல்ல. அவர் பாவ-புண்ணியங்களுக்கு ஏற்றபடி பலன்களை அளிக்கும் நீதிமான். அதனால்தான் தராசு சின்னத்தைக் கொண்ட துலாம் ராசியில் சனி பகவான் உச்சம் பெறுகிறார்.

அதோடு நவக்கிரகங்களில் அவருக்கு மட்டுமே 'ஈஸ்வர' பட்டம் இருக்கிறது. கோச்சாரம் என்பது தற்போதைய கிரகநிலைகளை குறிக்கும். அதன்படி எந்த ராசிக்கு சனி என்ன பலன் தருகிறார் என்பதை வைத்தே, பலன் கூறப்படுகிறது. ஏழரைச் சனி ஒருவர் பிறந்த ராசிக்கு மொத்தம் 7½ ஆண்டுகள் சனி பிடிப்பதைத்தான், 'ஏழரைச் சனி' என்கிறோம். ஒருவரின் ஜென்ம ராசிக்கு முந்தைய ராசியில் 2½ ஆண்டுகள், பிறந்த ராசியில் 2½ ஆண்டுகள், அதற்கு அடுத்த ராசியில் 2½ ஆண்டுகள் என்று இருப்பதையே, இந்த 7½ ஆண்டுகள் குறிக்கும்.

உங்களுடைய ராசி மேஷம் என்று வைத்துக்கொண்டால், அதற்கு முந்தைய வீடான மீன ராசியில் சனி சஞ்சரிக்கும் நேரத்தில் இருந்து உங்களுக்கு ஏழரைச் சனி தொடங்கும். உங்கள் ராசிக்கு அடுத்த ராசியான ரிஷப ராசியைக் கடக்கும் வரை இந்த ஏழரைச் சனி நீடிக்கும். உங்கள் ராசிக்கு முந்தைய வீட்டில் சனி சஞ்சரிக்கும் போது, அவர் 'விரயச்சனி'யாகவும், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும்போது 'ஜென்மச் சனி'யாகவும், ராசிக்கு அடுத்த இடத்திற்குச் செல்லும் போது, 'பாதச்சனி'யாகவும் பெயர்மாற்றம் அடைகிறார். விரயச் சனி ஏழரைச் சனியில் முதல் 2½ ஆண்டுகள், உங்கள் ராசிக்கு முந்தைய இடமான விரய ஸ்தானத்தில், சனி பகவான் இருப்பார். அப்போது நீங்கள் முன்னெடுக்கும் காரியங்களில் தோல்வி, வியாபாரத்தில் நஷ்டம், தேவையற்ற பணவிரயம், மருத்துவச் செலவு, கல்வியில் மந்தம், குடும்பத்தில் அடிக்கடி பொருட்கள் விரயமாதல், பயணங்களில் விபத்து, அலைச்சல் போன்றவை ஏற்படக்கூடும்.

சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால், இந்த பாதிப்புகள் அனைத்தும் வெகுவாக குறையும். ஜென்மச் சனி ஏழரைச் சனி காலத்தில் அடுத்த 2½ ஆண்டுகள் உங்கள் ராசியிலேயே, சனி பகவான் இருப்பார். இதனை ஜென்மச் சனி என்பர். இந்த 2½ ஆண்டுகளும் அதிக சோதனைகளைக் கொடுப்பார். உடல்நலக்குறைவு, தொழிலில் பெரும் மாறுதல், தொழில் இழப்பு, இடம்பெயர்தல் போன்ற அசுப பலன்கள் அதிகமாக நடந்தேறும். மனைவிக்கு ஆரோக்கியமின்மை, உறவினர்களின் பகை, சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு, சொத்து இழப்பு, சோதனை மேல் சோதனை உண்டாகும். சிறைவாசம், நீதிமன்றம் செல்லக்கூடிய நிலை என்று விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறலாம்.

இந்த காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகத்தில் சனிக்குரிய தசாபுத்தி சாதகமாக அமையப் பெற்றிருந்தால், கெடுபலன்கள் சற்று குறைந்து, மன அமைதி ஏற்படும். பாதச் சனி உங்கள் ராசிக்கு அடுத்த இடத்தில் கடைசி 2½ ஆண்டுகள் சனி இருப்பதை, 'பாதச்சனி' என்பர்.

இந்த காலகட்டத்தில் இதுவரை இருந்த சோதனைகள் சற்றே குறையும். ஆனால் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டதாகக் கருத முடியாது. பாதச்சனி காலத்தில், சனி பகவான் உங்களுக்கு அனுபவத்தைக் கொடுப்பார். இருப்பினும் அதிர்ஷ்ட வாழ்வு வாழ தடை ஏற்படுத்துவார். பெற்றோருக்கு கெடுபலன்களைத் தருவார். குடும்பத்தில் கருத்துவேறுபாட்டை தோற்றுவிப்பார்.

பாதச்சனி நடைபெறும் காலத்தில் கடைசி 6 மாதங்களில் வருமானம் முன்னேற்றம் தரும். குடும்பத்தில் சிக்கல் குறையும். நல்லவர்களுடன் நட்பு ஏற்படும். நலமிக்க வாழ்வு அமையும். வழக்கில் வெற்றி உண்டாகும். வாகன யோகம் கிடைக்கும்.
*

Share this story