அறிவு வேறு, ஞானம் வேறு : தரமான ஒரு நிகழ்வு பாரீர்..
 

By 
bri

ஆன்மிகப் பணியோடு, சமூகத் தொண்டுகளையும் இணைத்தே செய்தவர், விவேகானந்தர். இவரது ஆன்மிக குருவாக இருந்தவர், பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர். 

இவரிடம் ஏராளமான இளைஞர்கள், ஆன்மிக பாதையில் செல்ல சீடர்களாக இணைந்திருந்தனர்.

ஐயம் :

ஒரு நாள், அந்த சீடர்களில் மூன்று பேர், ராமகிருஷ்ணரை தனிமையில் சந்தித்து ஒரு விளக்கம் கேட்டனர். 

அதாவது, 'குருவே.. எங்களுக்கு ஒரு சந்தேகம் வலுத்துள்ளது. ‘அறிவு’, ‘ஞானம்’ ஆகிய இரண்டும் வேறு வேறா? அல்லது இரண்டுமே ஒன்றுதானா? என்பதை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்' என்றனர்.

அந்த மூன்று சீடர்களையும் அங்கேயே இருக்கும்படி சொன்ன ராமகிருஷ்ணர், அருகில் இருந்த ஒரு அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டினார். 

சிறிது நேரம் கழித்து, அறைக்குள் இருந்து வெளிப்பட்ட அவர், தன்னுடைய சீடர்களிடம், 'நீங்கள் ஒவ்வொருவராக அந்த அறைக்குள் செல்லுங்கள். அறைக்குள், மூன்று டம்ளர்களில் பால் வைக்கப்பட்டுள்ளது. அதில், ஒன்றை மட்டும் நீங்கள் குடித்து விட்டு வெளியே வர வேண்டும்' என்றார்.

பாத்திர அறிவு :

முதலில் ஒரு சீடன் உள்ளே சென்றான். அங்கே தங்க டம்ளர், வெள்ளி டம்ளர், வெண்கல டம்ளர் என்று மூன்று டம்ளர்களின் பால் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட சீடன், தங்க டம்ளரில் இருந்த பாலை எடுத்து பருகினான். தங்க டம்ளரில் இருந்த பாலை அருந்தியதால் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி.

இரண்டாவது மாணவன் உள்ளே சென்றபோது, வெள்ளி மற்றும் வெண்கல டம்ளர்களில்தான் பால் இருந்தது. தங்க டம்ளர் காலியாக இருந்தது. தங்க டம்ளரில் இருந்த பால் தனக்கு கிடைக்கவில்லையே என்று கொஞ்சம் வருந்தினாலும், அதற்கு அடுத்த நிலையில் மதிப்பளிக்கப்படும் வெள்ளி டம்ளரில் இருந்த பாலை பருகி விட்டு திருப்தியோடு வெளியே வந்தான்.

இப்போது மூன்றாவது சீடன் உள்ளே சென்றான். அவனுக்கு காலியாக இருந்த தங்கம் மற்றும் வெள்ளி டம்ளர்களையும், பால் இருந்த வெண்கல டம்ளரையும் பார்த்து அழுகையே வந்துவிட்டது. 

‘எனக்கு மட்டும் வெண்கல டம்ளரில் உள்ள பால்தானா?. நான் அவ்வளவு மட்டமா? என் நிலை இப்படி தாழ்ந்து விட்டதே?’ என்று நினைத்தவன், வெண்கல டம்ளரில் இருந்த பாலை பருகி விட்டு சோகத்தோடு வெளியே வந்தான்.

ராமகிருஷ்ணர் மூன்று சீடர்களையும் பார்த்து, 'அனைவரும் பால் குடித்தீர்களா?' என கேட்டார். 

முதல் சீடன் மகிழ்ச்சியுடன், 'ஆம் குருவே,  நான் மிகவும் கொடுத்து வைத்தவன், எனக்கு தங்க டம்ளரில் இருந்த பால் கிடைத்தது' என்றான். 

அடுத்த சீடன், 'எனக்கும் மகிழ்ச்சிதான் குருவே, தங்க டம்ளர் இல்லாவிட்டாலும், வெள்ளி டம்ளரில் உள்ள பாலை பருகினேன்' என்றான். 

மூன்றாவது சீடனுக்கு அழுகை பீறிட்டது. 'நான் மிகவும் துரதிருஷ்டசாலி குருவே. எனக்கு வெண்கல டம்ளரில் இருந்த பால்தான் கிடைத்தது' என பதிலளித்தான்.

பண்ட ஞானம் :

இப்போது, குரு அவர்களிடம் கூறினார். 'உங்கள் மூவருக்குமே, குங்குமப்பூ, ஏலக்காய் கலந்த பால்தான் கொடுக்கப்பட்டது. 

அதன் சுவையும், குணமும் ஒரேபோல் தான் இருக்கும் என்பதை யோசிக்க, உங்கள் மனம் ஒப்பவில்லை. 

மாறாக, தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று டம்ளர்களின் மதிப்பை பற்றியே யோசித்தீர்கள். 

நீங்கள் பாத்திரத்தில் இருக்கும் பண்டத்தை விட்டு விட்டு, பாத்திரத்தையே பார்த்திருக்கிறீர்கள்.

பாத்திரத்தைப் பார்த்து மகிழ்ச்சி கொள்வது அறிவு. அதனுள் இருக்கும் பண்டத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைவதுதான் ஞானம். 

ஞானிகள் பாத்திரங்களை விடுத்து, அதில் இருக்கும் பயன் கொடுக்கக்கூடிய பண்டத்தைப் பற்றியே சிந்திப்பார்கள். 

நீங்களும் அறிவால் இல்லாமல் ஞானத்தால் சிந்தித்திருந்தால், நீங்களும் கூட ஒரே மாதிரியான மனநிலையை எட்டியிருக்கலாம்' என்றார்.
*

Share this story