தொன்மைமிகு ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் சிவத்தலம் : நிஜரூப காட்சி தருகிறார்; பக்தர்கள் தரிசனம்..

By 
maasila

திருமுல்லைவாயல் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோவிலில், ஆண்டுக்கு 362 நாட்கள் சந்தனக் காப்பிலேயே இருக்கும் மூலவருக்கு, 

சித்திரை மாதம், சதய நட்சத்திர நாளுக்கு முந்தைய 2 நாட்கள் சந்தனம் களையப்பட்டு, பக்தர்களுக்கு நிஜரூப தரிசனத்தில் காட்சி அளிப்பது வழக்கம்.

அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை பக்தர்களுக்கு நிஜரூப தரிசனத்தில் அருள்பாலிக்கிறார்.

பழம்பெருமை வாய்ந்த கோவில் :

சென்னை ஆவடி- அம்பத்தூர் இடையே திருமுல்லைவாயலில் அமைந்துள்ள தொன்மையான சிவத்தலம் ஸ்ரீகொடியிடை நாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் கோவில். 

சுமார் 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெருமை வாய்ந்த இந்த கோவிலில், மூலவர் மாசிலாமணீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.

தீண்டாத்திருமேனியான இவரை தேவார நால்வர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், வள்ளலார், அருணகிரிநாதர் உள்ளிட்ட பல்வேறு அருளாளர்கள், மகான்கள் பாடிப் பரவி வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம்.

இது, தமிழக இந்து அறநிலையத்துறை நிர்வாகத்துக்குட்பட்டது ஆகும். 

இங்குள்ள கல்யாண தீர்த்த திருக்குளம், முருகப்பெருமானால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.

சந்தன காப்பு :

இன்று ஞாயிற்றுக்கிழமை, நாளை திங்கட்கிழமை ஆகிய 2 நாட்கள் சந்தனக் காப்பு களையப்பட்டு, நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு மாசிலாமணீஸ்வரர் அருள்பாலிக்க உள்ளார். 

இதையடுத்து, 26-ந்தேதி செவ்வாய்க்கிழமை சதய நட்சத்திர நாளில், மீண்டும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சந்தனக் காப்பு சாத்தப்படுகிறது. நிஜரூப தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசிக்க உள்ளனர்.

Share this story