நமசிவாய மந்திரமும், விருத்தகிரீஸ்வரர் கோவிலும்.!

By 
zz

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் மணிமுக்தாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது, விருத்தகிரீஸ்வரர் கோவில்.

இத்தல இறைவனுக்கு ‘பழமலைநாதர்’ என்ற பெயரும் உண்டு. பிரம்மதேவனும், அகத்தியரும் வழிபாடு செய்த இந்த ஆலயம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று பெருமைகளையும் கொண்ட சிறப்புமிக்கது. 

முக்தி தலம் :

முன்காலத்தில் இத்தல இறைவன் மலையாக காட்சியளித்தவர் என்பதால் இவருக்கு ‘முதுகுன்றீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. இந்த ஊரும் முன்காலத்தில் ‘திருமுதுகுன்றம்’ என்றே அழைக்கப்பட்டுள்ளது.

இத்தல அம்பாளின் திருநாமம், பெரியநாயகி என்பதாகும். ‘விருத்தாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறார். குரு நமச்சிவாயத்திற்கு இளமையாக காட்சி கொடுத்ததால், ‘பாலம்பிகை’, ‘இளைய நாயகி’ என்ற பெயரும் உண்டு. 

புண்ணிய தலமாகவும், முக்தி தலமாகவும் போற்றப்படும் இந்த ஆலயம், காசியை விடவும், மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு :

நான்கு புறமும் 26 அடி உயரமுள்ள மதில் சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் கொண்ட பரந்து விரிந்த ஆலயமாக, விருத்தகிரீஸ்வரர் கோவில் விளங்குகிறது. 

கோவிலின் நான்கு புறங்களிலும், விண்ணை முட்டும் உயரத்தில் 7 நிலை கோபுரங்கள் உள்ளன. 

இந்த ஆலயத்தில் தல விநாயகராக, ‘ஆழத்து விநாயகர்’ போற்றப்படுகிறார். இவரது சன்னிதி, கோவிலின் உள்ளே கிழக்கு நோக்கி சுமார் 18 அடி ஆழத்துக்குள் அமைந்து இருப்பதால், இந்தப் பெயர் வந்தது. 

விநாயகரின் ஆறு படைவீடுகளில் இது 2-வது படைவீடாகும். இதற்கு தனி மூன்று நிலை கோபுரமும், கொடிமரமும் உள்ளது.

28 லிங்கங்கள் :

சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இதை விளக்கும் விதமாக 28 லிங்கங்களை இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ததாக தல வரலாறு சொல்கிறது. இந்த 28 லிங்கங்களும், தனித்தனி சன்னிதிகளாக அமைந்துள்ளன. 

இந்த லிங்கங்களுக்கு நடுவே விநாயகரும், வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமானும் காட்சியளிக்கின்றனர். கோவிலில், வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர், காசியில் இருப்பது போன்ற வடிவமைப்பை கொண்டவர். இவரது கையில் வில் உள்ளது மற்றொரு தனிச் சிறப்பு.

நமசிவாய மந்திரம் :

சிவபெருமானை வழிபடும் அடியார்களின் அடிப்படை மந்திரமாக திகழ்வது, ‘நமசிவாய.’ இதனை ‘பஞ்சாட்சரம்’ என்பார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு, இங்கே ஐந்தாக அமைந்த விஷயங்கள் பல இருக்கின்றன. 

அவற்றில் 5 பிரகாரங்கள், 5 கோபுரங்கள், 5 கொடிமரங்கள், 5 நந்திகள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் முக்கியமானவை. மாசி மக பெருவிழாவின் போது, 5 கொடி மரங்களிலும் பெருவிழா கொடியேற்றம் நடைபெறும்.

இவ்வாலயத்தின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. இக்கோவில் திருப்பணி செய்த விபசித்து முனிவர் என்பவர், திருப்பணி செய்தவர்களுக்கு, வன்னி மரத்தின் இலையை ஒரு துணியில் வைத்து முடிந்து கொடுத்துள்ளார். 

அதை, வேலை செய்தவர்கள் வீட்டிற்குச் சென்று பிரித்து பார்த்தபோது, அவர்களின் கூலித் தொகை அதில் இருந்ததாகவும், இத்தல புராணம் பதிவு செய்கிறது.
*

Share this story