பழனி முருகன் கோவில் : திருக்கல்யாணம் முடிந்து, இன்று தேரோட்டம்..
 

By 
muru2

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில், பங்குனி உத்திர திருவிழா, கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இதனைத் தொடர்ந்து, தினந்தோறும் முருகப்பெருமான் வெள்ளிக்காமதேனு, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருக்கல்யாணம் :

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று மாலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் நடத்தப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

அதன் பின் மணக்கோலத்தில், சுவாமி வெள்ளத்தேரில் எழுந்தருளி, வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருத்தேரில் எழுந்தருளல் :

இன்று பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக, காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் சுவாமி அருள்பாலித்தல், பகல் 12.45 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

மாலை 4.30 மணிக்கு பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு பிறகு, தேரோட்டத்தில் பக்தர்கள் முழுவதுமாக பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதனிடையே கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அடிப்படை வசதிகளையும் சுகாதார வசதிகளையும் நிறைவேற்றித் தர அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு பக்தர்களின் பாதுகாப்பு காவல் துறையால் உறுதி செய்யப்படுகிறது.

விழாக்கோலம் :

பல்வேறு ஊர்களில் இருந்து தற்போது பழனி நோக்கி பக்தர்கள் கூட்டம் வரத் தொடங்கியுள்ளதால், நகரமே விழாக்காலம் பூண்டுள்ளது.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பழனி மலைக்கோவிலில் நேற்று முதல் வருகிற 20-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Share this story