பராசக்தி சமயபுரத்தாள் அருள்.!

சக்தி வழிபாடு என்பதே நம் வாழ்வை வளமாக்குவதற்கும், மேன்மைப்படுத்தி, செம்மையுடன் வாழ வைப்பதற்கும் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
சக்தி இல்லாமல், இந்தப் பிரபஞ்சமே இல்லை.சிவத்துக்கே சக்தியாகத் திகழ்கிறாள் பராசக்தி.
அதனால்தான், அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி என்று கொண்டாடி வழிபடுகிறோம்.
அப்படியான சக்தி தேவியானவள், பலப்பல வடிவங்களில், வெவ்வேறு திருநாமங்களில் ஒவ்வொரு ஊரிலும், குடிகொண்டு அருள்பாலித்து வருகிறாள்.
அப்படியான தெய்வங்களில், நம்மை ஆட்கொண்டு ஆட்சி செய்பவள்தான் சமயபுரம் மாரியம்மன்.
காட்சி :
அகிலத்து மக்கள் அனைவருக்கும், தாயெனத் திகழ்பவள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன்.
தீராத வியாதிகளையெல்லாம் தீர்த்து வைப்பவள் அன்னை. உடல் நோய்களோடு உள்ளத்து நோய்களையும் தீர்த்து வைக்கும் பரோபகாரி என்றும், பாசக்காரி என்றும் மாரியம்மனைப் போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழ்பவள் காஞ்சி ஸ்ரீகாமாட்சி என்றால், மாரியம்மன்களுக்கு எல்லாம் தலைவியாகத் திகழ்பவள் சமயபுரத்தாள்.
படித்தவர்-படிக்காதவர், ஜாதி மதம், பணக்காரர் -ஏழை என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, அன்றாடம் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளும் கருணைக்கடலென அற்புதமாகக் காட்சி தருகிறாள் சமயபுர நாயகி.
அருள் :
திருச்சிக்கு அருகில் உள்ளது சமயபுரம். ஒருமுறை, இவளின் சந்நிதியில் வந்து நின்று, நம் மனக்குறைகளை எல்லாம் மாரியம்மனிடம் முறையிட்டு, வேண்டிக் கொண்டால் போதும், நம் துக்கங்களை எல்லாம் போக்கி, அருளுவாள்.
பங்குனி மாதத்தில், விரதம் இருந்து சமயபுரம் வந்து, மாரியம்மனை தரிசித்துப் பிரார்த்தனை செய்வது இன்னும் விசேஷமானது என்றும் மும்மடங்கு பலன்களை வழங்கக் கூடியது. பங்குனி மாதம் முழுவதுமே, எப்போது வேண்டுமானாலும் நம் வீட்டில் விளக்கேற்றி, அம்மனுக்கு இளநீர் நைவேத்தியம் செய்யலாம். அருகில் உள்ள ஏதேனும் ஒரு அம்மன் கோயிலுக்குச் சென்று, இளநீர் அபிஷேகம் செய்யலாம்.
மங்கலம் பொங்கும் பங்குனி மாதத்தில், ஏதேனும் ஒருநாளில், விரதம் இருந்து திருச்சி சமயபுரத்தாளை கண்ணாரத் தரிசிப்போம். மனதார
வழிபடுவோம்.
முடிந்தால், அவள் மனம் குளிரும்படி, புடவை வாங்கிச் சார்த்துவோம். செளபாக்கியங்கள் மொத்தமும் தருவாள் தேவி. சங்கடங்களையும் துக்கங்களையும் போக்கி அருளுவாள் மாரி.