கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் வீதியுலா : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

By 
sivan

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பெருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை, வடம் பிடித்து இழுத்தனர்.

தரிசனம் :

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 63 நாயன்மார்கள் வீதி உலா நேற்று நடைபெற்றது. 

மதியம் 3 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சியளித்து, மாட வீதிகளில் உலா வந்தார். இரவு 9 மணி வரை இந்நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியைக் காண, மயிலாப்பூர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மயிலாப்பூரில் வசித்து இடம் பெயர்ந்து சென்றவர்கள் 63 நாயன்மார்கள் விழாவின்போது, மயிலாப்பூரில் கூடுவது வழக்கம்.

நேர்த்திக்கடன்-அன்னதானம் :

மேலும், நேர்த்திக் கடன் செலுத்துபவர்களும் இங்கு வந்து அன்னதானம் உள்ளிட்டவைகளை வழங்கி, நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.

மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளின் முன்பும் பந்தல் அமைத்து அன்னதானம், நீர்மோர், குளிர்பானம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தானமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் இருந்து, மயிலாப்பூர் கபாலீஸ்ரர் கோவில் வரையிலும், மறுபுறம் அடையாறு இந்திரா நகரில் இருந்து மயிலாப்பூர் வரையிலும், நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் அன்னதானம் வழங்கி நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். சுமார் 5 லட்சம் மக்கள் கோவிலுக்கு வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

63 நாயன்மார்கள் கபாலீஸ்வரரின் தொண்டர்கள் ஆவர். இவர்களை முன்னே அனுப்பி கபாலீஸ்வரர், அவர்களின் பின்னால் வீதி உலா வந்தார். இந்த நிகழ்ச்சி 16 கால்மண்டபத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்கியது. 

63 நாயன்மார்களும் கோவில் மாட வீதிகளைச் சுற்றி வலம் வந்தார்கள். அவர்களுடன் கபாலீஸ்வரரும் வெள்ளி விமானத்தில் வலம் வந்தார்.

கண்கொள்ளா காட்சி :

இந்த நிகழ்ச்சி இரவு 9 மணி வரை நடந்தது. இது பார்ப்பவர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமையும் என்பதாலும் கொரோனா தொற்று குறைந்ததால் 2 வருடங்களுக்கு பிறகு இந்த நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாலும் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.

இதனால், மயிலாப்பூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும், அதிக அளவில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Share this story