திருவண்ணாமலை கோவில் மகாதீப விழா : சில தகவல்கள்..

By 
megadeepam

திருவண்ணாமலை கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படும். அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும். 

கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படும். ஒருவனே அனைத்தும் என்ற தத்துவத்தை விளக்கும் விதமாக அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியின் ஈசான மூலையில் இருந்து தீபம் ஏற்றப்படும். மடக்கில் நெய்தீபம் ஏற்றப்படும்.

இந்த தீபத்திலிருந்து உலக தோற்றத்திற்கு காரணமான பஞ்ச பூத தத்துவத்தை விளக்கும் விதமாக 5 தீபங்கள் ஏற்றப்படும். அந்த 5 தீபங்களும் ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு, அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்படும். பின்னர் இந்த தீபங்கள் ஒரே தீபத்தில் சேர்க்கப்படும். 

இறைவன் அனைத்தும் நிறைந்தவன் என்ற தத்துவத்தை இது விளக்குகிறது. உயிர்களின் தோற்றத்திற்கு காரணமான பஞ்ச பூதங்களிலும், இறைவன் கலந்து இருப்பதை விளக்குகிறது. இது பரணி தீபமாகும். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். 

இந்த பரணி தீபம் காலையில் நடக்கும். மாலை 6 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். 

அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக "அண்ணாமலைக்கு அரோஹரா' எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள். 

ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். 

தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கவுரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியை அடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். 

திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந்துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும். 

லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்! தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
 

Share this story