சுப முகூர்த்தம் எது? : தெரிந்துகொள்வோம்..

By 
suba

குலதெய்வத்தை மனதில் வேண்டிக் கொண்டு, உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் குறிக்கும் நேரம் நிச்சயம் நல்ல முகூர்த்தமாக அமையும். 

மேலும் சுபமுகூர்த்தம் குறித்து தெரிந்து கொள்வோம்.

திருமணம், மலமாதத்தில் இடம்பெறக்கூடாது. மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது. 

சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, பங்குனி மாதங்களில் திருமணம் செய்வது நல்லது. ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கடைசி 3 நாட்கள் விலக்கப்பட வேண்டும். 

இயன்றவரை, சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது.

இவை நன்னாள் இல்லை :

முகூர்த்த லக்கினத்துக்கு 1,7 2, 8-ம் இடங்களில் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்கவேண்டும். முகூர்த்த லக்னத்தில் ராகு-கேது, குளிகன் அமரக்கூடாது. முகூர்த்த லக்னத்திற்கு முன், பின் ராசிகளில் பாவ கிரகங்கள் நிற்கக்கூடாது.

ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களில் திருமணம் செய்யக்கூடாது. பல சுப முகூர்த்த கால அட்டவணையில் குளிகை நேரத்தில் முகூர்த்தம் குறிக்கப்பட்டு இருப்பதை காணலாம். 

பஞ்சகம் கூடிய, லக்ன சுத்தமான முகூர்த்த நாளாக இருந்தால் கூட குளிகை நேரத்தை தவிர்க்க வேண்டும். குளிகை நேரத்தில் செய்யும் செயல்கள் திரும்பத் திரும்ப நடைபெறும் சாத்தியக் கூறுகள் அதிகம். 

ஒரு மனிதனுக்கு, திருமணம் வாழ்வில் ஒரு முறை மட்டுமே நடைபெற வேண்டும்.

சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் நாளிலும் அதற்கு முன், பின் 7 நாட்களிலும் திருமணத்தை தவிர்க்க வேண்டும். கிரகணம் நடந்த நட்சத்திரத்தில் திருமணம் நடத்தக் கூடாது.

திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிக மிக முக்கியம். மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 10, 14, 19, 22, 27, வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக் கூடாது. 

ஜென்ம, அனு ஜென்ம, திரி ஜென்ம நட்சத்திரங்களில் திருமணம் செய்யக் கூடாது. தாராபலம், சந்திரபலம் உள்ள நாட்கள் சிறந்த பலன் தரும். கரிநாளாக இருக்கக் கூடாது.

திருமணம் நிகழ்த்தப்பட வேண்டியவரின் நட்சத்திரப் பட்சியும், முகூர்த்த நட்சத்திரப் பட்சியும் அன்றைய தினம், படுபட்சியாகவோ அல்லது முகூர்த்த நேரத்தில் அப்பட்சிகள் துயில், சாவு பணிகளை மேற்கொள்வதாகவோ இருக்கக்கூடாது. 

கர்ம காரகன் :

கவுரி பஞ்சாங்கப்படி சுபகோரை, சுபவேளையாக இருக்க வேண்டும். மணமகள் மாதவிலக்காக இருக்கும் நாட்களில், திருமணம் செய்யக் கூடாது.

அஷ்டமச் சனியின் பிடியில் இருக்கும் பொழுது, ஜாதகரீதியாக சனியினுடைய தசையோ புத்தியோ நடைபெறும் போது, திருமணம் செய்யக்கூடாது. 

ஆனால் ஏழரைச் சனி வரும் காலத்தில், திருமணம் கட்டாயம் நடைபெறும் என்பது நிதர்சனமான உண்மை. சனி என்பவர் திருமணத்தை முடித்துக் கொடுக்கும் கர்ம காரகன்.

எண் கணித ஜோதிடத்தில் எட்டு என்பது மோசமான எண். திருமண தேதி எட்டாக இருக்கக் கூடாது. அதேபோல் 4, 5, 7 எண்கள் வரும் தேதிகளிலும் திருமணத்தை நடத்தக் கூடாது.

சிறப்பான முகூர்த்தம் :

குரு பலமும், சந்திரன் பலமும், தசா புத்திகளும் சரியாக அமையாதவர்கள், திருமண முகூர்த்தம் நாட்களைத் தள்ளிப்போடலாம். சில நேரங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தால், லக்னத்திற்கு 11-ல் சூரியன் இருக்கும் நேரத்தை பயன் படுத்தலாம்.

முகூர்த்த நேரம் என்பது ஒன்றரை மணி நேரமாகும். அந்த காலத்தில், நாழிகை கணக்கு வழக்கில் இருந்தது. 

ஒரு நாழிகை 24 நிமிடம். சுப நிகழ்ச்சிக்கான கால அளவு மூன்றே முக்கால் நாழிகை. 

மேலே கூறிய இந்த வழிமுறைகளின்படி, சுபமுகூர்த்த நாள் கிடைக்குமா? என்று வாசகர்கள் கேட்பது புரிகிறது.

மனிதர்கள் அனைவரும் வினைகளை அனுபவிக்க வந்திருக்கிறோம் என்பதால், பரிபூரண சுபநேரம் என்பது, ஒரு விநாடி அளவுகூட இல்லை என்பதே உண்மை. 

மேலே கூறிய நிலைகளில், ஒரளவு பொருந்தி வந்தாலே, மிகச் சிறப்பான முகூர்த்தமாக கருத வேண்டும்.

முன்னோர் வழியில் வாழிய  :

ஒரு சுப காரியம் நிகழ்த்தும் நாள், திதி, நட்சத்திரம் மற்றும் முகூர்த்த நேர லக்ன சுத்தம் அமைந்தாலே ஒரு சுபகாரியம் பரிபூரண சுபத்தன்மை பெறும். 

குலதெய்வத்தை மனதில் வேண்டிக் கொண்டு, உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் குறிக்கும் நேரம் நிச்சயம் நல்ல முகூர்த்தமாக அமையும். 

வாழிய வாழிய, முன்னோர் வகுத்த நன்னெறி வழியில்.!

Share this story