தாணுமாலய சாமி கோவிலில் ஆடி களப பூஜை இன்று தொடக்கம்; நிகழ்ச்சிகள் விவரம்..
 

By 
thanu3

* குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடி களப பூஜை 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை இன்று  (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை 12 நாட்கள் களப பூஜையும், 30-ந்தேதி உதய அஸ்தமன பூஜை என 13 நாட்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி, தினமும் காலையில் கோவிலில் தாணுமாலய சுவாமிக்கும், திருவேங்கடவிண்ணவரம் பெருமாளுக்கும் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் முடிந்த பிறகு காலை 10 மணிக்கு மகாவிஷ்ணுவாகிய பெருமாளுக்கும், 10.30 மணிக்கு தாணுமாலய சுவாமிக்கும் களப அபிஷேகம் நடைபெறுகிறது.

இதில், நறுமணத்துடன் கூடிய சந்தனத்துடன், பச்சை கற்பூரம், ஜவ்வாது, பன்னீர் ஆகியவை கலந்து தங்க குடத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து மாத்தூர் மடம் தந்திரி சஜித் களப பூஜை செய்கிறார். தொடர்ந்து பக்தர்களுக்கு களப பூஜை பிரசாதம், சிறப்பு தீபாராதனை காட்டப்படும். 

* ஆடி திருக்கல்யாண திருவிழா 5-வது நாள் நிகழ்ச்சியாக ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்தில் கோவிலில் இருந்து அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிலையில், கோவிலில் தீர்த்த கிணறுகளில் நீராடி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்திருந்தனர். இதனால் இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதுபோல் தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என்பதால் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவில் ரத வீதி பிரகாரங்களிலும் ஏராளமான தடுப்பு கம்பிகளும் அமைக்கப்பட்டிருந்தன.



 

Share this story