ஆறுமுகனின் அவதாரத் திருநாள் 'வைகாசி விசாகம்' : புராண நிகழ்வுகள்..

By 
visakam1

அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். 

சிவபெருமான் அசுரர்களுடைய கொடு மையை களைந்து அவர்களைத் காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளை தோற்றுவித்தார். அவை தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. 

கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டு சேர்த்தது. புராணங்களின்படி, சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. 

கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். 

ஆறு முகங்களைப் போற்ற இவர் ஆறுமுகன் என்று அழைக்கப்படுகிறார். முருகப் பெருமானின் ஆறு திருமுகங்களும் முற்றறிவு, அளவற்ற இன்பம், வரம்பில்லாத ஆற்றல், தன் வயமுடைமை, பேரருளுடைமை, இயற்கை அறிவு என்னும் ஆறு குணங்களாகின.

இவை தவிர இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன. ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமானதால் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது. 

சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்ரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன் (சண்முகன்) போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். 

ஐம்பூதமும் உயிருமாகிய ஆறினையும் திருமுகங்களாக உருவகித்துக் கூறி, எங்கும் நிறைந்த கடவுள் தன்மையை மக்களுக்கு நினைவூட்டக் கருதிய பண்டைப் பெரியோர் இறைவனை ஆறுமுகப் பெருமான் என்றனர். 

எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு, சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால், சைவ மக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும். 

இந்நாளில் கோவில்களில் வசந்தோற்சவமும், பிரம்மோற்சவமும் நடைபெறும்.  இந்நாள் பல சமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.


 

Share this story