எட்டாவது குழந்தையாக, ஏன் கண்ணன் வந்தான்?

தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் மணம் முடித்து வைத்து, அவர்களை தன் தேரிலேயே அரண்மனை நோக்கி அழைத்துச் சென்றான் கம்சன்.
அப்போது வானில் ஒலித்த அசரீரி, ‘தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால், உன் உயிருக்கு ஆபத்து’ என்று சொல்லியது. அதுவரை அன்பாக நோக்கிய தேவகியை, வெறுப்பாக நோக்கினான் கம்சன்.
அவளை, அப்போதே கொன்றுவிட நினைத்த கம்சனை, வசுதேவர் தடுத்து நிறுத்தினார். ‘தங்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளையும் கம்சனிடமே தந்து விடுவதாகவும், தேவகியை ஒன்றும் செய்ய வேண்டாம்’ என்றும் அவர் கேட்டுக்கொண்டதால், மன சமாதானம் அடைந்தான், கம்சன்.
எட்டாவது குழந்தை :
இருப்பினும் தங்கையையும், அவளது கணவனையும் சிறையில் அடைத்து தன் கண்காணிப்பிலேயே வைத்துக்கொண்டான். அவர்களுக்குப் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும், தரையில் வீசிக் கொன்றான்.
அவனது கணக்குப்படி ஏழு குழந்தைகள் பிறந்து, அவர்களின் வாழ்வு முடிந்துவிட்டது. எட்டாவது குழந்தைக்காக காத்திருந்தான், கம்சன்.
தெய்வ கடாட்சம் :
ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமி தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு, தேவகியின் வயிற்றில் பிறந்தார், கிருஷ்ணர். தங்களுக்கு பிறந்த குழந்தையை தேவகியும், வசுதேவரும் ரசிப்பதை மறந்து தரிசித்துக் கொண்டிருந்தனர்.
ஏனெனில் அதன் ஒளி பொருந்திய தேகம், தெய்வ கடாட்சத்தை கண்முன் நிறுத்தியது.
கணநேரத்தில் அக்குழந்தை, மகாவிஷ்ணுவாக உருமாறி நின்றது. 'நீங்கள் இருவரும் சுதபா- பிருச்னி தம்பதியராக இருந்தபோது, 12,000 ஆண்டுகள் என்னை நோக்கித் தவம் செய்தீர்கள். அந்த தவத்தை மெச்சி, நான் உங்களுக்கு காட்சியளித்தபோது, என்னையே மகனாக அடையவேண்டும் என்று வரம் கேட்டீர்கள்.
அதன்படியே, நான் உங்களுக்கு அந்தப் பிறவியில் ‘பிருச்னிகர்பா’ என்ற பெயரில் மகனாக பிறந்தேன். மறு பிறவியில், நீங்கள் காஷ்யபர்- அதிதி தம்பதியராக இருந்த போது ‘உபேந்திரன்’ என்ற பெயரில் பிறந்து வளர்ந்தேன்.
அனைத்தும் சுபமாகவே நடக்கும் :
இப்போது ‘கண்ணன்’ என்ற திருநாமத்தில் வளர்வதற்காக, உங்களுக்கு மீண்டும் பிறந்துள்ளேன். இதன்பிறகு, உங்கள் இருவருக்கும் பிறப்பு இல்லை.
கம்சனிடம் இருந்து உங்களையும், மக்களையும் விடுவிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. அதன் பிறகு, நீங்கள் வைகுண்டம் வந்துவிட வேண்டியதுதான்.
என்னை, கோகுலத்தில் உள்ள நந்தகோபர் மனைவி யசோதையிடம் சேர்த்துவிடுங்கள்.
அதற்குப் பதிலாக, அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடுங்கள். பிறகு அனைத்தும் சுபமாகவே நடக்கும்' என்றார். மகாவிஷ்ணு.
அவர், தான் பிறந்ததன் நோக்கத்தை சொல்லிய மறுநொடியே, மீண்டும் குழந்தையாக மாறிப்போனார். அவர் சிறையில் நள்ளிரவு வேளையில் கிருஷ்ணன் தினமே, ‘கிருஷ்ண ஜெயந்தி’ என்று கொண்டாடப்படுகிறது.
விரதம் :
அஷ்டமி திதியில் பிறந்த காரணத்தால், இந்த நாளை ‘கோகுலாஷ்டமி’ என்றும் அழைப்பார்கள். இந்த புனித நாளில், கண்ணனுக்கு பிடித்த மான நைவேத்தியங்களான, சீடை, முறுக்கு, வெண்ணெய் போன்றவற்றை படைத்து வழிபட வேண்டும்.
நாம் படைக்கும் நைவேத்தியங்களை ஏற்றுக்கொள்ள கண்ணன் வருகை தருவார் என்ற நம்பிக்கையிலேயே, அன்றைய தினம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கண்ணனின் கால் சுவடுகள் பதிக்கப்படுகின்றன.
இந்த நாளின் பகல் வேளை முழுவதும் விரதம் இருந்து, இரவில் வழிபாடு செய்து, அதன்பிறகு உணவருந்த வேண்டும்.