தஞ்சை பெரியகோவில் தேரோட்ட விழா : மாவட்ட கலெக்டரின் முக்கிய தகவல்கள்..

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா நடைபெறும்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
இந்நிலையில், தேரோட்டம் நடைபெறும் 4 ராஜவீதிகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் வருகிற 1-ந் தேதி காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்காக தேர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தேரோட்டம் நடைபெறும் நான்கு வீதிகளிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் சாலையில் பள்ளங்கள் உள்ளதை சரி செய்யவும், மழைநீர் வடிகால் கட்டமைப்பு பகுதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த தேர் திருவிழாவில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேரோட்டத்துக்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு கூடுதல் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
அனைத்து அரசுத்துறை அதிகாரிகளை கொண்டு ஏற்கெனவே ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, அதன்படி அந்ததந்த துறைகள் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தேரோட்டத்தின் போது முதலில் விநாயகர், சுப்பிரமணியர், தியாகராஜர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நான்கு வீதிகளிலும் வலம் வரும், தேர் வடம் பிடிக்கப்பட்டு பிற்பகல் தேர் நிலைக்கு மேலவீதியில் உள்ள தேர் மண்டபத்தை வந்தடையும்.
இத்தேர் திருவிழா நான்கு ராஜ வீதிகளான மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜ வீதிகளில் நடைபெறும். தற்போதுள்ள தேர் 2015-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த தேரோட்டம் கொரோனா காரணமாக 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகள் நடைபெறவில்லை.
தேரின் சாதாரண உயரம் 19 அடி, தேர் அலங்காரம் செய்யப்பட்டவுடன் 50 அடியாக இருக்கும். இந்த தேரின் அகலம் 18 அடியாகும். சக்கரத்தின் உயரம் 6 அடி, தேர் சாதாரண எடை 40 டன், அலங்காரம் செய்யப்பட்டவுடன் 43 டன் எடையில் இருக்கும்.
*