சித்ரா பவுர்ணமி கிரிவல வழிபாடும் பலன்களும்.. 

By 
girivalam7

மாதந்தோறும் பவுர்ணமி தினம் வந்தாலும், சித்திரை மாதம் வரும் `சித்ரா பவுர்ணமி' தினத்துக்கு கூடுதல் சிறப்புகள் உள்ளது. சித்திரை மாதம் பவுர்ணமி திதியில், சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் இந்த தினத்தை `சித்ரா பவுர்ணமி' என்று அழைக்கிறார்கள். 

மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் அன்று ஒன்றாகி இருக்கும். அது மட்டுமின்றி சூரியபகவான் உச்சம் பெற்ற மேஷ ராசியில் இந்த பவுர்ணமி தினம் வரும். இதுவும் சித்ரா பவுர்ணமி தினத்தின் சிறப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 

அம்மன் ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக, ஆராதனைகள், திருவிளக்கு பூஜை, பால்குடங்கள் எடுப்பது மற்றும் சித்திரை கஞ்சி தயாரிக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்பது போன்றவற்றில் கலந்து கொள்ளலாம். 

சிவாலயங்களிலும், பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக பூஜைகள், வீதி ஊர்வலங்கள் நடைபெறும். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை இந்திரன் பூஜிப்பார். அது போல காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாளை பிரம்மன் வழிபடுவார். 

இது போன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் சித்ரா பவுர்ணமி திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். அதில் திருவண்ணாமலையில் நடைபெறும் `சித்ரா பவுர்ணமி கிரிவலம்' தனித்துவமும் மகத்துவமும் கொண்டது. அது ஏன் என்பதை நாம் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டும். 

ஒவ்வொருவரது வாழ்விலும் அமாவாசை, பவுர்ணமி இரண்டு திதிகளும் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சக்தி படைத்தவை. சூரியனுடன் 0 டிகிரியில் சந்திரன் இணைவது அமாவாசை ஆகிறது. பிறகு சந்திரன் தினமும் 12 டிகிரி வீதம் நகர்ந்து 15-வது நாளில் 180 டிகிரியில் சூரியனுக்கு சம சப்தமாகும் போது பவுர்ணமி ஆகிறது. 

பவுர்ணமியில் சந்திரன் முழுமையான ஆகர்ஷண சக்தியைப் பெற்று அருள் ஆற்றலை வெளிப்படுத்துவார். அதனால் அன்று செய்யும் பூஜைகள், வழிபாடுகள் கூடுதல் பலன்களைத் தரும். சித்ரா பவுர்ணமி தினத்தன்று சந்திரன் இதுவரை இல்லாத அளவுக்கு ஆகர்ஷ்ண சக்தியை வெளிப்படுத்துவார். அதாவது ஆண்டுக்கு ஒரு தடவையே இந்நாளில் சந்திரனிடம் இருந்து பல மடங்கு அளவுக்கு ஈர்ப்பு- சக்தி வெளிப்படும். 

சந்திரன் வழங்கும் அந்த சக்தியை நாம் பெற வேண்டும். சந்திர ஒளி நம் உடல் மீது பட வேண்டும். இதை கருத்தில் கொண்டே சங்க காலத்தில் இருந்த நம் மூதாதையர்கள் சித்ரா பவுர்ணமியை மிக, மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள். வீடுகளில் யாரும் முடங்கிக் கிடக்கக்கூடாது. அன்றிரவு வெளியில் வந்து சந்திரன் தரும் சக்தியை பெற வேண்டும் என்று ஆலயங்களில் விதம், விதமாக விழாக்களை உருவாக்கினார்கள். 

இந்த அடிப்படையில் தான் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்லும் மரபு உண்டானது. இந்த உண்மையை தெரிந்து கொண்டதால் தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் திருவண்ணாமலைக்கு படையெடுத்து வருகிறார்கள். நாளை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலையில் எந்த மாதம், எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை ஏற்கனவே நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்னர். ` சித்ரா பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும்?' என்று பலரும் யோசிக்கலாம். இதற்கு ஒரே வரியில் பதில் சொல்வது என்றால், `நம் ஆத்ம பலம் அதிகரிக்கும்' என்ற மிகப்பெரிய பலன் கிடைக்கும். 

ஒவ்வொருவருக்கும் `ஆத்ம பலம்' என்பது மிக, மிக முக்கியமானது. ஒருவரிடம் ஆத்ம பலம் பெருகினால் தான் அவர் இந்த உலகில் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும். ஆத்ம பலம் அதிகரித்தால் கடவுளைத் தேடும் ஞானமும், அறிவாற்றலும் அதிகரிக்கும். 

இதற்கு பின்னணியில் சூரியனும், சந்திரனும் உள்ளனர். பித்ருகாரரான சூரியனும், மாத்ருகாரரான சந்திரனும் சிவசக்தியின் ஐக்கியமாக போற்றப்படுகிறார்கள். பிராணாயமம், யோகா போன்றவற்றில் சிறப்பு பெற சூரியனின் அனுக்கிரகமும், ஆத்ம பலம் மேம்பட சந்திரனின் அனுக்கிரகமும் அவசியம் தேவை. 

ஆத்ம பலம் மேம்பட்டால், மனம் வசப்படும். மனம் கட்டுப்பாடு இல்லாமல் போய் விட்டால் வாழ்க்கை தடம் மாறி விடும். மனம் கட்டுப்பட, கட்டுப்பட நாம் யார், நாம் எப்படி வாழ வேண்டும் என்ற பக்குவம் உண்டாகும். பிறவிப் பெருங்கடலில் நீந்தி கரையேற வேண்டும் என்ற தாக்கத்தை இது தான் கொடுக்கும். 

முக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தும். இந்த பக்குவத்தை நாம் சித்ரா பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது பெற முடியும். இந்த பக்குவம் பெருக, பெருக உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும். பணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தூய்மையான, நிம்மதியான வாழ்வை நாம் வாழ முடியும். 

தூய்மையும், நிம்மதியும் ஒருவருக்கு இருந்து விட்டால், அவர் எல்லா சுகங்களையும் அனுபவிக்க முடியும். ஒரு மனிதனுக்கு இந்த பிறவியில் இதை விட வேறு என்ன வேண்டும். எனவே எல்லாம் தரும் ஆத்ம பலத்தைப் பெற சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வோம். சிறப்பான வாழ்வை உறுதி செய்வோம்.

Share this story