சபரிமலை வருவதை பக்தர்கள் தவிர்க்கவும் : தேவஸ்தானம் வேண்டுகோள்

கேரளாவின் தென்கிழக்கு அரபிக் கடலில், குறைந்த காற்றம் உருவாகியதன் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழா,பாலக்காடு,
மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது.
கடந்த இரு நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக, பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
முக்கிய சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துவருவதால், பம்பா நதியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பம்பா நதி நீரி செல்லும் மணியாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், பம்பா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பம்பா நதியில் அபாயக் கட்டத்தைதாண்டி நீர் செல்வதால், சபரிமலைக்கு பக்தர்கள் இன்று (திங்கள் கிழமை) வருவதைத் தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்பின், 21-ம் தேதிவரை பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம்செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால், பக்தர்கள் ஆன்-லைன் முன்பதிவு மூலமே, முறையான கொரோனா பாதுகாப்பு வழிகாட்டல்களுடன்தான் அனுமதிக்கப்படுவார்கள்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக இரு கரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும், ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழும் கொண்டு வர வேண்டும்.