பக்தர்கள் இதனை நம்பவேண்டாம் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Devotees should not believe this: Tirupati Devasthanam announcement

கொரோனா  பரவலுக்கு முன்பு, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். 

தற்போது, கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், திருப்பதிக்கு தினமும் குறைந்த அளவிலேயே பக்தர்கள் வருகிறார்கள்.

விஐபி தரிசன விளம்பரம் :

இந்நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வித்தியாசமான விளம்பரம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த விளம்பரத்தில் ஒரு பக்தர் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 116 செலுத்தினால் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து, ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு அழைத்து செல்வோம். அங்கு 5 நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

அதன்பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் மற்றும் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மீண்டும் அவரவர் ஊர்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாகவே, கொண்டு சென்று விடப்படும் என விளம்பரப்படுத்தி உள்ளது.

இந்த கவர்ச்சிகரமான விளம்பரம் பற்றி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதை அறிந்த திருப்பதி தேவஸ்தானம் அதிர்ச்சி அடைந்தது.

ஏமாற வேண்டாம் :

இதுதொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘வி.ஐ.பி. தரிசனத்தை நேரடியாக வி.ஐ.பி.களுக்கும், அவர்களின் சிபாரிசு கடிதம் கொண்டுவருபவர்களுக்கும் மட்டுமே வழங்கி வருகிறோம். 

இதுபோன்ற தனியார் நிறுவனங்களுக்கோ அல்லது சுற்றுலா நிறுவனங்களுக்கோ வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வழங்கப்படாது.

மேலும், இதுபோன்ற கவர்ச்சி விளம்பரங்களை செய்யும் கும்பலை நம்பி ஏமாற வேண்டாம்’ என்று பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளை பெயரில் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. 

இதன்மூலம் யார் வேண்டுமானாலும் ரூ.10,500 செலுத்தி இந்த டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். இது ஆன்லைன் மூலமாகக் கூட கிடைக்கிறது. ரூ.10 ஆயிரம் நன்கொடையாகவும், ரூ.500 டிக்கெட் விலை எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த டிக்கெட்டை பெற்ற பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன ஏற்பாடுகளை தேவஸ்தானமே செய்து கொடுக்கிறது. 

அப்படி இருக்கும்போது, ஹெலிகாப்டரில் திருப்பதி கோவிலுக்கு அழைத்து செல்வோம் என விளம்பரம் செய்பவர்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வாய்ப்புள்ளது.

எனவே, இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்கள் யார்? வியாபார நோக்கத்தில் முன்பதிவு செய்கிறார்களா என்பதை திருப்பதி தேவஸ்தானம் கண்காணிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this story