ராமேஸ்வரம் தீர்த்தக்கடலில், பக்தர்கள் புனித நீராடி வழிபாடு..

By 
rwm

காசிக்கு நிகராக கருதப்படும் பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.

இதனால் மாதத்தில் அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிவார்கள். அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வந்தது.

கடந்த மாதம் 17-ந்தேதியில் வந்த முதல் ஆடி அமாவாசையில் ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர். 2-வது ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இதற்காக நேற்று காலை முதல் வேன், பஸ்கள் மூலமாக வந்த அவர்கள் அமாவாசை நாளான இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடற்கரையில் திரண்டனர். அங்கு புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

இதன் காரணமாக பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தர்ப்பணம் கொடுத்த பின் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

ராமேசுவரத்தில் நேற்றும், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கோவில் வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ராமேசுவரம் பஸ் நிலையம் மற்றும் கோவிலை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் இருந்து முக்கிய ஊர்களுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அங்குள்ள கடலில் அமைந்துள்ள நவக்கிரகங்களை வழிபட்டனர்.


 

Share this story