விநாயகருக்கு தங்கக்கவச அலங்காரத்தில், வைர கிரீடம் அணிவிப்பு; எங்கே தெரியுமா?

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புதுவையின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் நடை திறக்கப்பட்டது.
மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், அமெரிக்க வைர கீரிடம் அணிவிக்கப்பட்டது.
உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர். சதுர்த்தியையொட்டி தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில், சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக 30 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது.