ஊதுபத்தி ஏற்றுவதன் தத்துவம் தெரியுமா?

By 
pati8

நம்மில் பலரும் இல்லத்து பூஜை அறையில், தெய்வ வழிபாடுகளைச் செய்யும்போது, தீப, தூபம் காட்டுவதும், ஊதுபத்தியை ஏற்றிவைப்பதும் வழக்கம். கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுபவர்களும் கூட, அர்ச்சனைப் பொருட்களோடு ஊதுபத்தியையும் சேர்த்தே வாங்கிச் சென்று இறைவனுக்கு சமர்ப்பிப்பார்கள். 

ஆலயங்களிலும், இல்லத்தின் பூஜை அறையிலும் ஊதுபத்தி ஏற்றி வைப்பது என்பது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த ஊதுபத்தி ஏற்றும் வழிபாட்டு முறையில் ஒரு தத்துவம் ஒளிந்திருப்பதாக சொல்கிறார்கள். அதை அறிந்துகொள்வோம். 

அதாவது, ஊதுபத்தியை ஏற்றி வைத்தவுடன், அதில் இருந்து நறுமணம் வெளிப்பட்டு, அறை முழுவதும் பரவுவதை உணரலாம். அது தெய்வீக சக்தியை இல்லத்திற்குள் பரவச் செய்வதாகும். ஏற்றி வைத்த ஊதுபத்தியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, இறுதியில் சாம்பல்தான் மிஞ்சும். 

தன்னையே சாம்பலாக்கிக் கொண்டு, தன்னை சுற்றியிருப்பவர்களை தன்னுடைய மணத்தால் மகிழ்விக்கும் சக்தி கொண்டது, ஊதுபத்தி. இது ஒரு தியாகத்தின் வெளிப்பாடு ஆகும். 

இறைவனை உண்மையாக நேசிக்கும் பக்தர்கள், தன்னுடைய சுயநலத்தை விட்டொழிக்க வேண்டும். அவர்கள் சிந்தனை பொதுநலம் கொண்டதாக, பிரதிபலன் எதிர்பாராததாக இருக்க வேண்டும். மற்றவர்களின் வாழ்க்கையை மணம் வீசச் செய்வதே தெய்வீகச் செயலாகும். 

ஊதுபத்தி சாம்பலானாலும், அதன் மணம், காற்றில் கலந்திருக்கும். அதனை முகர்ந்தவர்களின், நினைவில் எப்போதும் நிலைத்திருக்கும். அதுபோலத்தான் வாழும்போது மற்றவர்களுக்காக நன்மை செய்து மறைந்தவர்களின் பேரும் புகழும் எப்போதும் மக்களிடையே நிலைத்திருக்கும். இதுபோன்ற குணத்தைத் தான் ஊதுபத்தி குறிக்கிறது. 

இதுபோன்ற குணத்தை உடையவர்கள் தான் இறைவனுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள் இதை தான் நம் பெரியவர்கள் அவ்வாறு கூறியுள்ளனர். "அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்" மற்றவர்களுக்கு நன்மைத் தரும் நல்ல விஷயங்களைச் சொல்வதால் ஒருவருடைய தீவினைகள் தேய்ந்து நல்வினைகள் பெருகும்.

 

Share this story