அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது, எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே - கவியரசு கண்ணதாசன்..

By 
kanna34

'அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே' என்ற கவியரசு கண்ணதாசன் உலகுக்கு உணர்த்திய வார்த்தைகள்..

* சாக்கடை என்பது மோசமான பகுதிதான். ஆனால், அப்படி ஒன்று இல்லாவிட்டால் ஊரே சாக்கடை ஆகிவிடும்.

* அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப் பெற முடியாது, அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம்.

* மீன் நீரிலே வாழ்வது ஆச்சரியமில்லை, அந்த நீரிலேயே கொதித்து சாவதுதான் ஆச்சரியம். மனிதனுக்கு நினைவுகள் இருப்பது ஆச்சரியமில்லை, அதிலேயே வெந்து மடிவது தான் வியப்பு.

* மனிதனுடைய திறமை பெரிதல்ல, கிடைக்கின்ற சந்தர்ப்பமே, அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது.

* கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக் கூடாது, மீண்டும் மழைக் காலம் வருகிறது. மழைக்காலம் வந்து விட்டதென்று நதி குதிக்கக் கூடாது. அதோ, வெயில் காலம் வந்து கொண்டிருக்கிறது.

* எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.

* நல்லவன் படகில் போகும் போது, துடுப்பு தண்ணீருக்குள் மூழ்கிவிட்டால், நதியே திசை மாறி அவன் சேர வேண்டிய இடத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

* ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம். அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.

* இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியைக் கவனமாகக் கையாள வேண்டும். இதே மாதிரி, எந்தப் பக்கமும் சேரக்கூடிய மனிதர்களோடு கவனமாக இருக்க வேண்டும்.

* நிரந்தரமானது துன்பம். வந்து போவது இன்பம். இதுதான் வாழ்க்கை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

* சிறகு கிடைத்தால் பறப்பது மட்டும் வாழ்க்கையல்ல. சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் வாழ்க்கை.

* துன்பங்களை வளர்ப்பதும் தனிமைதான், தணிப்பதும் தனிமைதான்.

* ஞானத்திற்கும் ஆணவத்திற்கும் சிறு வித்தியாசம்தான். நம்மிடம் ஏதுமில்லை என்று நினைப்பது ஞானம். நம்மைத் தவிர ஏதுமில்லை என்று நினைப்பது ஆணவம்.

* தேவைக்கு மேல் பணமும், திறமைக்கு மேல் புகழும், உழைப்புக்கு மேல் பதவியும் கிடைத்து விட்டால், பார்வையில் படுவது எல்லாம் சாதாரணமாக தான் தெரியும்.

* கட்டுக்காவல் எங்கே பலமாக இருக்கிறதோ, அங்கேதான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன.

* ஒன்று தவிர்க்க முடியாது எனும்போது, அதை எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானே தீர வேண்டும்.

* சந்தர்ப்பம் வாய்க்காத திறமையும், திறமை இல்லாதவனுக்கு கிடைக்கும் சந்தர்ப்பமும் பயன்படுவதில்லை.

* எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.

* குளிக்கும் அறையில் மெதுவாகச் செல்லவில்லையெனில் வழுக்கி விழுவாய். வசதியாக இருக்கும்போது ஜாக்கிரதையாக வாழவில்லையெனில் கடனில் வழுக்கி விடுவாய்.

* நிலத்தில் வரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை, அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.
 

Share this story