நோன்பும் மாண்பும்.!

நோன்பு அரபு மொழியில் ஸவ்மு என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது, இதன் பொருள் தடுத்துக் கொள்ளுதல் என்பதாகும்.
இஸ்லாமியக் கடமை என்ற நிலையில் இதற்கு அளிக்கப்படும் விளக்கம், கிழக்கு வெளுக்கும் நேரத்திலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை நோன்பு நோற்பதாக நாட்டம் (நிய்யத்து) வைத்து, எதையும் உண்ணாமலும், குடிக்காமலும், உடலுறவு கொள்ளாமலும் தன் உடலைத் தடுத்துக் கொள்வதுடன், உள்ளத்தின் விருப்பங்களைத் தடுத்து வைத்து, தன்னிடம் கட்டுப்பாட்டை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.
ஒவ்வோர் ஆண்டிலும் ரமலான் மாதம் முழுவதும் வயது வந்த, சித்த சுவாதீனமுள்ள முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் 5 கடமைகளுள் ஒரு கடமை (பர்ளூ) ஆகும்.
இஸ்லாத்தின் 5 கடமைகளை ஃபர்ளு அல்ல என்று மறுப்பவன் காஃபிராகி (இஸ்லாத்தின் வட்டத்திலிருந்து வெளியேறி) விடுவதால் நோன்பு கடமை, என்பதை மறக்கக்கூடாது.
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கத் தவறி விட்டால், அதனைப் பின்னர் நிறைவேற்றுவது (களாச் செய்வது) கடமை.
நோன்பு குறித்து குர்ஆன் : பற்றுறுதி கொண்டோரே.! நீங்கள் பரிசுத்தமடைவதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்குக் கடமையாக்கப்பட்டதைப் போன்று, உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (2:183)
மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும், நன்மை தீமையை பிரித்தறியக் கூடியதாகவும் உள்ள குர்ஆன் அருளப் பெற்றதே இந்த ரமலான் மாதம். ஆகவே, எவர் அம் மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்.
ஆனால், எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்தை மேற்கொண்டிருப்பவராகவோ இருப்பின் (அவர் நோன்பை விடுவதற்கு அனுமதியுண்டு, எனினும் விடுபட்ட நோன்புகளை ரமலான் அல்லாத) மற்ற நாட்களில் கணக்கிட்டு (நோற்று) விடவும்.
அல்லாஹ் உங்களுக்கு இலகுவான கட்டளையைக் கொடுக்க விரும்புகிறானே தவிர உங்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை.(2:185)
நோன்பு குறித்து பெருமானார் (ஸல்) : ஆதமுடைய வழித்தோன்றல்களுக்கு, ஒவ்வொரு நற்செயலுக்கும் அதுபோன்ற பத்து முதல் எழுநூறு (பிரதி பலன்கள்) அதிகரிக்கப்படுகின்றது- நோன்பைத் தவிர, ஏனெனில் நோன்பு எனக்குரியது. எனவே, அதற்குரிய பலனை நானே அளிப்பேன்.
காரணம், எனக்காகவே நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும் விட்டொதுங்குகிறான் என்று அல்லாஹ் கூறுகிறான் என்றும்; நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சி, அவர் நோன்பு திறக்கும்போது ஒரு மகிழ்ச்சி (நிலை)யும், தன் இறைவனைச் சந்திக்கும்போது ஒரு மகிழ்ச்சி (நிலை)யும் உண்டு என்றும்: நோன்பாளியின் வாயில் ஏற்படும் வாடை இறைவனிடம் கஸ்தூரியின் மணத்தை விட மிகவும் மேலானதாகும் என்றும் ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.