தீபாவளி கூறும் தித்திப்பு கதைகள்.!

By 
Gossip stories about Diwali!

இந்திய கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்த கலாச்சாரமாகும். ஒவ்வொரு பண்டிகைக்கும் பல வரலாற்றுக் கதைகள் இருப்பதுபோலவே, தீபாவளிக்கும் பல வரலாற்றுக் கதைகள் உள்ளன. இது குறித்து வந்த கதைகள் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

தீப ஒளி :

தீபாவளியை, தீப ஒளி என்றும் அழைக்கிறார்கள். தீமைகள் அகன்று, நன்மை பிறக்கும் நாள் என்பது அதன் பொருள்.

தீப ஒளித் திருநாளான தீபாவளித் திருநாள் இந்தியா மட்டுமின்றி இலங்கை, நேபாளம், மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, பிஜி, வங்கதேசம், என்று பல நாடுகளிலும் தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. 

தீபாவளி பண்டிகையானது வடநாட்டில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. 

தீபாவளியின் முதல் நாள் தண்டேராஸ், இரண்டாவது நாள் நரக சதுர்த்தசி, மூன்றாவது நாள் லட்சுமி பூஜை, நான்காவது நாள் கோவர்த்தன பூஜை, ஐந்தாவது நாள் பாய்தூஜ் என ஐந்து நாட்களும் மிகவும் விமரிசையாக வட இந்தியர்களால் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகின்றது.

கதைகள் ஆயிரம் :

ராமர் தனது மனைவி சீதை மற்றும் சகோதரர் லட்சுமணனுடன் ராவணனைக் கொன்ற பிறகு அயோத்தி திரும்பிய நன்னாளே தீபாவளித் திருநாள் என்று புராணங்கள் கூறுகின்றன. 

அன்றைய தினம் அயோத்தி மக்கள் அவர்களை வரவேற்பதற்காக வீதிகளிலும் வீடுகளிலும் களிமண் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்தனர். 

ராவணன் என்னும் அரக்கனைக் கொன்று வெற்றியுடன் நாடு திரும்பியதன் நினைவாக, அன்று முதல் தீபாவளி மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது.

*பூமித்தாய் பூதேவி மற்றும் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராஹா ஆகியோரின் மகனாகிய நரகாசுரன் அனைத்திலும் சக்தி வாய்ந்தவனாகவும் நீண்ட ஆயுள் பெற்றவனாகவும் இருக்க வேண்டி தந்தையிடம் வரம் பெற்றார். 

அந்த வரத்தின் அதிகாரத்தால் வானத்தையும் பூமியையும் வென்று தேவர்கள் மற்றும் மக்களை அதிக கொடுமைகளுக்கு உள்ளாக்கினார்.எனவே தேவர்கள் அனைவரும் விஷ்ணுவை அணுகி நரகாசுரன் அகங்காரத்தை அழிக்குமாறு கேட்டுக் கொண்டனர். 

விஷ்ணு ,கிருஷ்ணஅவதாரமெடுத்து நரகாசுரனைக் கொன்றார். நரகாசுரன் மரணத்திற்கு முன் கிருஷ்ணரிடம் தனது மரணத்தை பூமியில் கோலாகலமாகக் கொண்டாட வேண்டும் என்று வரம் பெற்றார். 

கிருஷ்ணரும் அந்த வரத்தை அருளியதன் காரணமாக நரகாசுரன் இறந்த தினமே தீபாவளித் திருநாளாக கொண்டாடப் படுகின்றது.

* சமண நூல்களின் படி, தர்மத்தை போதிக்கும் ஆசிரியரான இருபத்தி நான்காவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் பகவான் மகாவீரர் தீபாவளி நாளில் மோட்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக சமணர்கள், மகாவீரர் முக்தி அடைந்த நாள் என தீபாவளித் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

* ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் இருபத்தியோர் நாள் கேதார கௌரி விரதம் முடிந்தது இந்த தினத்தில்தான் என்று கூறப்படுகிறது. 

விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ உருவம் எடுத்தார். இறைவன் ஜோதி வடிவாக நம்முள் இருப்பதை வழிபடுவதற்கான சிறப்பு நாள் தீபாவளி ஆகும்.மேலும் ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைந்ததாக கூறுகிறது ஸ்கந்த புராணம்.

* தீர்க்கதமஸ் என்ற முனிவர் தனது மனைவி, மக்களுடன் காட்டில் வசித்து வந்தார்.இருட்டினால் மட்டுமல்ல,துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள் மற்றும் அரக்கர்களால் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். 

அப்பொழுது அங்கு வந்த முனிவர் சனாதனரிடம் தீர்க்கதமஸ் மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைய வழி ஏதும் இல்லையா? என்று கேட்டார். 

இதற்கு பதிலளித்த சனாதனர் தீர்த்தமாடி,புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பம் ஆகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தார். 

மேலும், புனிதமான எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மகாலட்சுமி இருக்கிறாள். 

சரஸ்வதி வாசம் செய்கிறாள். வாசனை நிறைந்த சந்தனத்தில் பூமாதேவியும், மஞ்சள் கலந்த குங்குமத்தில் கௌரி தேவியும்,புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும் வாசம் செய்கிறார்கள். 

ஆகவே, புனிதமான இந்நன்னாளில் எண்ணை ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி இறைவனை வழிபடுவது நன்மை பயக்கும் என்று கூறினார். 

அவ்வாறே தீர்க்கதமஸ் முனிவரும் விரதமிருந்து கொண்டாடப்பட்ட தீப ஒளித் திருநாள் தீபாவளி என்று புராணக் கதைகள் கூறுகின்றன.

* விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமிக்கு பூஜை செய்து தீபங்களை ஏற்றி வீட்டில் பல இடங்களில் வைத்தால், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

* பொற்கோவில் கட்டுமான பணிகள் துவங்கிய தினம் என சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

* தீபாவளிப் பண்டிகையை இந்தியர்கள் மற்றும் இந்துக்களைத் தவிர பிற நாட்டவரும் பிற மதத்தவரும் கூட கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது.

* முகலாய மன்னர்களில் சிலர், தீபாவளி போன்ற இந்துக்களின் பண்டிகைகளை ஆதரிப்பதாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

* தமிழ் மன்னர்கள் பண்டைய காலத்தில், ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பில் இருந்துள்ளனர். 

இந்தியாவிலிருந்து வாசனை திரவியங்கள், மூலிகைகள், யானைத் தந்தங்கள் ஏற்றுமதி செய்யப் பட்டதாக வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றது. 

அந்த வர்த்தக தொடர்பின்போது, இந்தியாவிலிருந்து சென்ற பல வாணிகர்கள் இடம் பெயர்ந்த நாட்டில் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். ஆகவே, பல நாடுகளிலும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப் படுகின்றது.

* ஒடிசாவில் தீபாவளிக்கு மறுநாள் எம தீபாவளி என்று கொண்டாடுகிறார்கள்.

* பீகாரில் தீபாவளி அன்று வீட்டுக்கு வீடு துடைப்பத்தை தீவைத்துக் கொளுத்தி வீசி எறிகிறார்கள். இப்படி செய்தால் மூதேவி ஓடிவிடும் என்ற நம்பிக்கை அந்த மக்களிடம் நிலவுகின்றது.

* குஜராத் மக்கள் தீபாவளியன்று புது கணக்கு வழக்குகளை தொடங்குகிறார்கள்.

* நேபாளத்திலும் தீபாவளிப் பண்டிகையானது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது.

* ஆசிய நாடுகளில் பெரும்பாலானவர்கள் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

* அமெரிக்கா, ஹாலந்து, நியூசிலாந்து, கனடா, மொரிஷியஸ், ஜப்பான், இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

தீபாவளி பண்டிகைக்கு சிங்கப்பூரில் தேசிய விடுமுறையானது ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகின்றது.
*

Share this story