அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை.!

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற ஜீவகாருண்ய நெறிகளைப் போதித்த அருட்பிரகாச வள்ளலார்,சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று, பல நூற்றுக்கணக்கான அருட்பாடல்களை அருளியுள்ளார். அப்பாடல்கள், 'திருவருட்பா' என்று போற்றப்படுகின்றன.
சத்திய ஞான சபை :
ஜீவகாருண்ய நெறிகளையும், வாழ்வியல் தத்துவங்களையும் மக்களுக்கு போதித்தார் வள்ளலார். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், 1867-ல் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார்.
நமது ஸ்தூல உடல் அமைப்போடு ஒப்பிடும் வகையில், சத்திய ஞான சபையும் எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஜோதி தரிசனம் :
இங்கு, தெற்கு வாயில் வழி உள் சென்றால், வலப்புறம் பொற்சபையும் இடப்புறம் சிற்சபையும், பஞ்சபூதங்களைக் குறிக்கும் 5 படிகளையும் காணலாம். அவற்றைக் கடந்து உள்ளே சென்றால், சதுர வடிவ பீடத்தின் மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபமும், அதற்குப் பின்னே 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக் கண்ணாடியையும் காணலாம்.
கண்ணாடியை மறைக்கும் வண்ணம் 7 நிறங்களைக் கொண்ட 7 திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இந்த திரைகளை விலக்கி, கண்ணாடியில் தெரியும் தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம் எனப்படுகிறது.
இந்த ஜோதி தரிசனத்தை 1872-ல்தைப்பூச தினத்தில் சத்திய ஞான சபையில் வள்ளலார் தொடங்கி வைத்தார். அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தைப்பூச தினத்தில் மட்டுமே 7 திரைகள் விலக்கப்பட்டு, ஜோதி தரிசனம் காணலாம். மாத பூசங்களில் 6 திரைகள் மட்டுமே விலக்கப்படும்.
7 வண்ண திரைகளின் தத்துவம் :
கருப்புத்திரை - மாயையை விலக்கும் (அசுத்த மாயாசக்தி), நீலத்திரை - உயர்ந்த நோக்கத்துக்கு ஏற்படும் தடையை விலக்கும் (சுத்த மாயாசக்தி), பச்சைத்திரை - உயிர்களிடம் அன்பு, கருணையை உண்டாக்கும் (கிரியாசக்தி), சிவப்புத்திரை - உணர்வுகளை சீராக்கும் (பராசக்தி), பொன்னிறத்திரை - ஆசைகளால் ஏற்படும் தீமைகளை விலக்கும் (இச்சாசக்தி), வெள்ளைத்திரை - ஞானசக்தி, 6 வண்ணங்களும் இணைந்த திரை- உலக மாயைகளை விலக்கும் (ஆதிசக்தி).
நமது பௌதிக உடலில் இருக்கும் உயிரை ஆன்மா என்று அழைக்கிறோம். நமது உடல் அணுக்களால் ஆனது. இது மிகவும் பிரகாசம் உடையது.
கால்பங்கு பொன் நிறமும், முக்கால் பங்கு வெண்மை நிறமும் கொண்டது. இந்த ஆன்மா பிரகாசத்தை மாயா சக்திகளான 7 திரைகள் மறைக்கின்றன.
அந்த திரைகளை நீக்கினால், நாம் முழுமையான ஞானம் பெற முடியும். இந்த தத்துவத்தைத்தான் ஞானசபையில் 7 திரைகளை நீக்கிய பிறகு, ஜோதியை தரிசிக்கும் நிகழ்ச்சி உணர்த்துகிறது.
தர்ம சாலை :
மேலும், ஏழை எளிய மக்கள் பசியைப் போக்க, சத்திய ஞான சபை அருகிலேயே தர்ம சாலையை நிறுவினார்.
இந்த தர்ம சாலையில் அடுப்பு அணையாமல் அன்று முதல் இன்று வரை, 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
'கடவுள் ஒருவரே. அவர் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் எனவும்,புலால் உண்ணக் கூடாது. எந்த உயிரையும் கொல்லக் கூடாது; சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கூடாது' எனவும் அருட்பிரகாச வள்ளலார் ஸித்தி அடைந்துள்ளார்.