அனுமன் ஜெயந்தி : நாமக்கல் மலைக்கோட்டையில், இன்று சிறப்பு அபிஷேகம்

Hanuman Jayanthi Special anointing today at Namakkal Hill Fort

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், இன்று ஞாயிற்றுக்கிழமை அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி, கோவில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

வடை மாலை சாத்துப்படி :

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, இன்று காலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டது.

இன்று அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை சாமிக்கு வடைமாலை சாத்துப்படியைத் தொடர்ந்து,  

நல்லெண்ணெய் சிகைக்காய்த்தூள், பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், திரவியம் உள்ளிட்டவைகளான அபிஷேகமும், சொர்ணாபிஷேகமும் நடைபெறுகிறது. மதியம் 1 மணியளவில் தங்கக் கவசம் சாத்தப்படுகிறது.

இணைய வழியில், பதிவு செய்த 3,000 பேர் ஒரு மணி நேரத்துக்கு 500 பேர் என அனுமதிக்கப்படுகின்றனர். 

தல வரலாற்றுத் துளிகள் :

* நாமக்கல்லில் வாயு மைந்தன் அனுமான், வானமே கூரையாகக் கொண்டு அருள்பாலிக்கிறார். 
இவரது சன்னதியில் கோபுரம், மேற்கூரை கிடையாது.

சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் வாயு மைந்தன் என்பதால், காற்றுபோல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதே இதன் தத்துவமாகும்.

* நரசிம்மர் - நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரில்தான், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 

எதிரில் உள்ள நரசிம்மரைத் திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.

* நரசிம்மருக்கு கோபுரம் இல்லை. அவர் அமர்ந்திருக்கும் இடம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. 

'அவருக்குக் கோபுரம் இல்லாததால், அவரது தாசனான தனக்கும் கோபுரம் தேவையில்லை' என்று ஆஞ்சநேயர் கூறியதாக பக்தியின் மேன்மை உணர்த்தப்படுகிறது.

* நாமகிரி தாயார் கோவிலுக்குப் பின்னால் உள்ள குடைரைக் கோவில்தான் நரசிம்மர் கோவில் ஆகும். 

மலையின் மேற்குப் புறம் உள்ள மலைக்கோவிலில் இந்த நரசிம்மர் - நாமகிரி தாயார் கோவில் உள்ளது.

* நரசிம்மரின் சிலை, மலையைக் குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரி தாயாரின் கோவில், மலையைக் குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஒரு குடைவரைக் கோவில் ஆகும்.

* பல்லவர் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. மலையின் கிழக்குப் புறம் அரங்கநாதன் கோவில் உள்ளது. 

இங்கு 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடகன் மீது படுத்தவாறு, திருவரங்கன் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.

* நாமக்கல் மலைக்கோட்டை, தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

இதன்மீது ஏறுவதற்கு, மலையின் தென்மேற்குப் பகுதியில், சிறிய படிக்கட்டுள்ளது. பாறையைச் செதுக்கி இந்தப் படிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
*

Share this story