வரலாற்றுச் சிறப்பு மிக்க, விநாயகரின் 5-ம் படைவீடு

By 
Historically significant, the 5th Invasion of Ganesha

பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் காலத்தியது என்ற கருத்து நிலவினாலும், இங்குள்ள கல்வெட்டுகள், அந்த மன்னனின் காலத்துக்கும் முற்பட்டது என்பதை பறைசாற்றுகின்றன.

இது ஒரு குடைவரைக் கோவிலாகும். சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள். 

கல்வெட்டுகள் :

மூலவரின் பெயர் ‘கற்பக விநாயகர்.’ இவர் இரண்டு கரங்களுடன், 6 அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ளார். இவரது தும்பிக்கை வலம்புரியாக இருக்கிறது. 

பிள்ளையார்பட்டி என்று அழைக்கப்படும் இந்த ஊர், முன்காலத்தில் எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், ராசநாராயணபுரம், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்றெல்லாம் அழைக்கப்பட்டிருப்பதாக, கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. 

இங்கு திருவீசர், மருதீசர், செஞ்சதீஸ்வரர் என்ற சிவ சன்னிதிகளும், சிவகாமி அம்மன், வடமலர் மங்கை, சவுந்திரநாயகி ஆகிய அம்மன் சன்னிதிகளும் காணப்படுவது சிறப்பு. 

4-ம் நூற்றாண்டு :

இந்தக் கோவிலில் காணப்படும் விநாயகர் உருவம், 4-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. விநாயகரைப் போல, 14 சிலைகள் குடைவரை சிற்பங்களாக இங்கே செதுக்கப்பட்டுள்ளன.

விநாயகரிடம், திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் வழிபாடு செய்கிறார்கள். 

வேண்டுதல் நிறைவேறியதும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர். 

விநாயகருக்கு நடைபெறும் 10 நாள் உற்சவத்தின், 9-வது நாளில் 80 கிலோ சந்தனம் கொண்டு விநாயகருக்கு ‘சந்தனக் காப்பு’ செய்யப்படும். இது ஆண்டுக்கு ஒரு முறையே என்பதால், இந்தக் காட்சியைக் காண பக்தர்கள் குவிவார்கள். 

விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில ஆலயங்களில் பிள்ளையார்பட்டி முக்கியமானது. 

விநாயகர் தேரின் ஒரு பக்கத்தை பெண்களும், மற்றொரு பக்கத்தை ஆண்களும் பிடித்து இழுப்பார்கள்.

படைவீடு அமைவிடம் :

முருகப்பெருமானைப் போலவே, விநாயகருக்கும் ஆறுபடைவீடுகள் உண்டு. 

விநாயகருக்கான ஆறு படைவீடுகளில் பிள்ளையார்பட்டி, 5-ம் படைவீடாகும்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடிக்கும், புதுக்கோட்டைக்கும் இடையே உள்ளது பிள்ளையார்பட்டி. 

காரைக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டரில் இந்த ஊரை அடையலாம்.

Share this story