கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில், பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே வடம் பிடிக்க முடியும்: டிஜிபி தகவல்..

By 
kanda5

கண்டதேவி தேரோட்டத்தில், பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமேவடம் பிடித்து தேர் இழுக்க முடியும் என்று சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில், சிவகங்கை தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளுக்கு (நாடு) உட்பட்ட 150 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இக்கோயிலில் வழிபட்டு வருகின்றனர். இங்குஆண்டுதோறும் ஆனித் திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

1998-ம் ஆண்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் 2002 முதல் 2006-ம் ஆண்டு வரை தேரோட்டம் நடைபெற்றது. கும்பாபிஷேகம், புதிய தேர் செய்தது போன்ற காரணங்களால் 17ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.

உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, கடந்த பிப்.11-ம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. அப்போது தேவஸ்தான ஊழியர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். இந்நிலையில், இக்கோயிலில் ஆனித்திருவிழா கடந்த 13-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 21-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

இதனிடையே 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்த தேரோட்டத்தில், அனைத்து சமூகத்தினரும் இணைந்து வடம் பிடித்து இழுப்பது என்று கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சிவகங்கைஎஸ்.பி. அலுவலகத்தில் தேரோட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

2,800 போலீஸார் பாதுகாப்பு: இந்தக் கூட்டத்துக்கு கூடுதல் டிஜிபி அருண் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித், தென்மண்ட ஐ.ஜி. கண்ணன், ராமநாதபுரம் டிஐஜி துரை, காவல் கண்காணிப்பாளர்கள் டோங்கரே பிரவீன் உமேஷ் (சிவகங்கை), அரவிந்த் (மதுரை), சந்தீஸ் (ராமநாதபுரம்), தேவஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். அனைத்து சமூகத்தினரும் இணைந்து, அமைதியான முறையில் தேர்இழுப்பது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூடுதல் டிஜிபி அருண் கூறும்போது, ‘‘வடம் பிடித்து இழுக்க பெயர் பட்டியல் பெறப்பட்டது. அதில் உள்ளவர்கள் மட்டுமே வடம் பிடித்து தேர் இழுக்க முடியும்.பாதுகாப்புப் பணியில் 2,800 போலீஸார் ஈடுபடுவர். 16 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 55 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன’’ என்றார். தொடர்ந்து, கூடுதல் டிஜிபி அருண், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் உள்ளிட்டோர் கண்டதேவியில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர்.

Share this story