முக்தி தரும் தில்லை.. சிதம்பரம் நடராஜர் ஆலயம்..!  - அரிய தகவல்கள்..

By 
thillai

ஆகாயம்,பூமி, காற்று, நீர், நெருப்பு என்பவை பஞ்ச பூதங்கள். இந்த பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. 

சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும். 

பார்க்க முக்தி தரும் தில்லை என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. சிதம்பரம் ஆலயத்துக்குள் நுழைந்ததும் எந்த பிரகாரத்துக்கு எப்படி செல்வது! எந்த மூர்த்தியை வழிபடுவது? என்பன போன்ற குழப்பம் ஏற்பட்டு விடும். அந்த அளவுக்கு இது பெரிய ஆலயம். 

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது. சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரத்தின் பல பகுதிகளிலும் தீர்த்தங்கள் உள்ளன. சிதம்பரம் கோவில் தல புராணம் சங்க இலக்கியமான கலித் தொகையின் முதல் பாடல் சிதம்பரம் நடராஜர் துதியாக உள்ளது. எனவே சங்க காலத்துக்கு முன்பே சிதம்பரம் தலம் புகழ் பெற்றிருந்தது. 

ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு தல புராணத்தை சிறப்பாக சொல்வார்கள். சிதம்பரம் ஆலயத்துக்கு புலியூர் புராணம், கோவில் புராணம், சிதம்பரப் புராணம் என்று மூன்று தல புராணங்கள் உள்ளன. நடராஜர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இங்கு இருப்பதால், இது கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. 

பொன்னால் வேயப்பட்ட கருவறை : சங்க கால தமிழர்கள் கட்டிய சிதம்பரம் ஆலயம் இப்போது இல்லை. தற்போதுள்ள ஆலயம் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகும். சங்க காலத்துக்கு முன்பு சிதம்பரம் ஆலயம் கடலோரத்தில் இருந்ததாக பாடல்கள் குறிப்பின் மூலம் தெரிகிறது. 

முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் படையெடுப்பின் போது சிதம்பரம் தலம் பல தடவை இடித்து நொறுக்கப்பட்டது. என்றாலும் பழமை சிறப்பு மாறாமல் சிதம்பரம் தலம் மீண்டும் எழுந்தது. சிதம்பரம் தலம் உருவானபோது பொன்னம்பலம் எனும் கருவறை தென் திசை நோக்கி இருந்ததாம். பல்லவ மன்னர்கள் புதிய கோவில் கட்டியபோது அதை வடதிசை நோக்கி அமைத்து விட்டதாக சொல்கிறார்கள். 

நடராஜர் சந்நிதிக்கான கொடி மரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும். நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் உள்ளன. சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர். 

சிவகங்கை தீர்த்த குளம் நான்கு புறமும் நல்ல படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இல்லை. சிவகங்கை தீர்த்த குளம் அருகில் சிறு தூணை நட்டியுள்ளனர். அங்கியிருந்து பார்த்தால் 4 ராஜகோபுரங்களையும், ஒரு சேர தரிசனம் செய்ய முடியும். 

அறுபத்து மூவர் வரலாறு மட்டும் சிதம்பரம் கோவிலில் பாதுகாப்புடன் வைக்கப்படாமல் இருந்திருந்தால் 63 நாயன்மார்கள் பற்றி குறிப்புகள் நமக்கு தெரியாமல் போய் இருக்கும். சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால் நந்தனார் சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார். 

திருமுறைகளை சொன்ன பிள்ளையார் சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை இந்த உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார். எனவே விநாயகரை மூத்த நாயனார் என்று அழைக்கின்றனர். சிதம்பரம் தலத்தை நால்வரும் புகழ்ந்து பாடியுள்ளனர். 

எனவே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் குரு பூஜை பெரிய திருவிழா போல இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது. மாணிக்கவாசகர் மட்டுமின்றி நந்தனார், கணம்புல்லர், திருநீலச் கண்டக் குயவர் ஆகியோரும் தில்லையில் முக்தி பெற்றனர்.
 

Share this story