ஜூன் 21-ல் கண்டதேவி கோயில் தேரோட்டம்: அனைத்து சமூகத்தினரும் இணைந்து வடம்பிடித்து இழுக்க முடிவு..

By 
kanda3

கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜூன் 21-ம் தேதி நடைபெறும் தேரோட்டத்தில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து வடம் பிடித்து இழுக்க முடிவு செய்யப்பட்டது.

தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்கு உட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் (நாடு) சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வழிபட்டு வருகின்றனர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறும். தேர்வடம் பிடித்து இழுப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த 1998-ல் தேரோட்டம் நின்றது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் கடந்த 2002 முதல் 2006 வரை தேரோட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து, கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக மீண்டும் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர், தேர் பழுதானதாகக் கூறி, தேரோட்டத்தை நடத்தவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், புதிய தேர் செய்யப்பட்டது.

ஆனால் தேர் வெள்ளோட்டம் நடத்தாமல் இருந்தது. மகா.சிதம்பரம் என்பவர் தொடர்ந்த வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு தேர் வெள்ளோட்டம் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கரோனாவால் வெள்ளோட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் உத்தரவுபடி பிப்.11-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தேவஸ்தான ஊழியர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

இந்நிலையில் இக்கோயில் திருவிழா ஜூன் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூன் 21-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து தேரை இழுப்பது தொடர்பான கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் நடைபெற்றது.

டிஎஸ்பி பார்த்திபன், இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் சங்கர், சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும் தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

இதில், அனைத்து சமூகத்தினரும் இணைந்து தேரை வடம் பிடித்து இழுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கோட்டாட்சியர் பால்துரை கூறுகையில் 

“தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளில் ஒவ்வொரு பகுதிக்கும் தலா 100 பேர் தேர் இழுக்க அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான பட்டியலை ஆதாருடன் அந்தந்த பகுதி மக்களே தயாரித்து கொடுப்பர். அவற்றை வருவாய்த்துறை, போலீஸார் ஆய்வு செய்தபின்னர் அனுமதிக்கப்படுவர்” என்று கூறினார்.

Share this story