வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக நிகழ்வுகள்..

By 
venp

சென்னை- பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் கிராமத்தில் தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, வைத்தியநாத சுவாமி, விநாயகர் உள்ளிட்ட சந்நிதிகளுக்கு வண்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், மஹா கும்பாபிஷேக விழா கடந்த 6-ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் விமரிசையாக தொடங்கியது. அதைத் தொடர்ந்து, 2-ம் கால, 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில், விமான கோபுரம், தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி மற்றும் காளஹஸ் தீஸ்வரர், பஞ்ச கோஷ்ட தேவதைகள், ஆஞ்சநேயர், நால்வர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு நேற்று காலை 6.15 முதல் 7.15மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இரவு 7 மணிக்கு கற்பக விநாயகர் கலாலயம் வேலம்மாள் கார்டன் மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Share this story