சத்தியவான் சாவித்திரி வரலாறு கேளீர்.. 

By 
savi1

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது, மார்க்கண்டேய முனிவர் திரவுபதிக்கு இந்த கதையை எடுத்துக்கூறுகிறார். அந்த கதையை நாம் இன்று தெரிந்துகொள்ளலாம். 

ஒரு ஊரில், மத்திரநாடு என்ற ஊர் இருந்தது. அந்த ஊரில் அசுபபதி என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவருக்கு பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லை. எனவே, சாவித்ரி என்ற பெண் தெய்வத்தை வழிபட்டார். அந்த சாவித்திரி என்ற பெண் தெய்வத்தின் ஆசியாலும், சூரியபகவானின் அருளாளும், அசுபபதி மன்னனுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சாவித்ரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். 

சாவித்ரி சிறுவயதில் இருந்தே கல்வி மற்றும் கேள்விகளில் சிறந்துவிளங்கினாள். அதேநேரத்தில், சாய்பு நாட்டை துய்மத்சேனன் என்பவர் ஆட்சி செய்து வந்தார். அந்த மன்னனுக்கு ஒரு மனைவியும், சத்தியவான் என்ற மகனும் இருந்தனர். சத்தியவான் சிறுவதில் இருந்தே மிகுந்த பேரழகுடனும், வீரமுடனும் இருந்தார். 

ஒரு நாள் சாய்பு நாட்டு மன்னன் துய்மத்சேனனை எதிரிநாட்டு மன்னர்கள் போர்தொடுத்து வந்தனர். அந்த போரில் தோல்வி அடைந்த துய்மத்சேனன் எதிரிகளிடம் தன்னுடைய நாட்டை பறிகொடுத்ததோடு வாழவே வழி இல்லாமல் தன்னுடைய மனைவியையும், மகன் சத்தியாவானையும் அழைத்துக்கொண்டு காட்டிற்கு சென்றனர். 

சத்தியாவனும், அவருடைய அப்பா, அம்மாவும் காட்டில் வாழ்ந்து வந்தனர். நாளடைவில் சத்தியவானின் அப்பாவிற்கும், அம்மாவிற்கு கண்பார்வை பறிபோனது. தினமும் சத்தியவான் காட்டில் கிடைக்கக்கூடிய விறகுகளை எடுத்து அதனை விற்று பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து வந்தார். இப்போது சத்தியவானும், சாவித்திரியும் பருவ வயதை அடைந்து இருந்தனர். 

ஒரு நாள் சாவித்ரி காட்டை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று தனது தந்தையிடம் அனுமதி கேட்க அவரும் சம்மதிக்கவே உடனே தனது தோழிகளுடன் சாவித்ரி காட்டை சுற்றிப்பார்க்க சென்றார். தோழிகளுடன் காட்டை சுற்றிவரும்போது காட்டில் விறகுவெட்டிக்கொண்டிருந்த சத்தியவானை பார்த்தார். 

அதுமட்டுமல்லாமல் சத்தியவான் தனது தாய்-தந்தைக்கு ஆற்றிய தொண்டை கண்டு அவருடைய மனதை பறிகொடுத்தார். சாவித்ரிக்கு, சத்தியவான் மீது காதல் வந்தது. உடனே சாவித்ரி அரண்மணைக்கு சென்றதும் காட்டில் நடந்ததை தனது தந்தையிடம் கூறினார். அதுமட்டுமல்லாமல் சத்தியவானை எனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் கூறினார். 

அப்போது அங்கு நாரதமகரிஷி வந்தார். நாரதர் நடந்தவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டு சாவித்ரியின் தந்தையிடம், அரசே சத்தியவான் அர்ப்ப ஆயுள் உள்ளவன் என்று சொன்னதோட மட்டுமில்லாமல் இன்றில் இருந்து 12 மாதங்களில் அவன் இறந்துவிடுவான் என்றும் கூறினார் நாரதர். இதைகேட்டதும் மன்னன் மிகுந்த அதிர்ச்சியுடன் சாவித்திரியை பார்த்தார். 

ஆனால் சாவித்ரி மனதால் நினைத்தவனையே கணவனாக அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சாவித்ரி அப்பாவை பார்த்து அப்பா... நான் சத்தியவானை பார்த்ததுமே எனது மனதில் கணவனாக நினைத்துவிட்டேன். மணந்தால் சத்தியவானை தான் மணப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். மகளின் உறுதியை கண்ட அசுபபதி அரசனும் திருமணத்திற்கு சம்மதித்தார். 

சத்தியவானுக்கும், சாவித்ரிக்கும் திருமணம் நடந்தது. அப்போது நாரத மகரிஷி சாவித்ரியிடம் சில நோன்பு முறைகளை சொல்லிக்கொடுத்தார். சாவித்ரி நீ உள் அன்புடன் இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால் உனக்கு நல்லது நடக்கும் என்று கூறினார் நாரதர். 

இப்போது திருமணம் முடிந்ததும் அரண்மணையை விட்டுவிட்டு சாவித்ரி, சத்யவான் கூட காட்டில் சென்று வாழ கிளம்பினாங்க. சத்தியவான் என்றைக்கு இறப்பான் என்று தெரிந்தும் சாவித்ரி அதனை தனது கணவனிடம் தெரிவிக்கவே இல்லை. இப்படி நாட்கள் சென்றுகொண்டிருந்தன.

இன்னும் சத்தியவான் இறப்பதற்கு 3 நாட்களே இருந்தன. 3 நாட்களும் சாவித்ரி உணவும், உறக்கமும் இன்றி கடுமையாக விரதம் இருந்தார். 3-வது தனது கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி கண்ணீர்மல்க பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். சத்தியவான் இறக்கும் நாளும் வந்தது. 

சத்தியவான் இறக்கும் நாள் அன்று விறகு வெட்ட காட்டிற்கு சென்றுகொண்டிருந்த சத்தியவானிடம், சாவித்ரி இன்றைக்கு நானும் உங்களுடன் விறகு வெட்ட வருகிறேன் என்று கூறினார். சத்தியவானும், சாவித்ரியை தன்னுடன் காட்டிற்கு அழைத்துச்சென்றார். சாவித்ரியை ஒரு மரத்தின் நிழலில் உட்கார வைத்துவிட்டு சத்தியவான் மட்டும் விறகுவெட்ட கிளம்பினார். கொஞ்சநேரத்திலேயே விறகுவெட்டிக் கொண்டிருந்த சத்தியவானுக்கு பயங்கரமான தலைவழி வந்தது. 

உடனே சத்தியவான், சாவித்ரி அருகில் வந்து அவரது மடியில் படுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் சத்தியவானின் உயிர் பிரிந்தது. அங்குவந்த எமதர்மராஜா அவரை கவர்ந்து செல்ல வந்தார். பதிவிரதையான சாவித்ரியின் கண்களுக்கு எமதர்மன் கண்ணுக்கு தெரிந்தார். எமதர்மனை வணங்கிய சாவித்ரி தாங்கள் யார்? என்று கேட்டார். நான் எமதர்மராஜா என்று கூறினார். 

உடனே எமன் பெண்ணே உயிரிழந்த உன் கணவனின் உடலை விட்டுவிடு. மரணம் மனிதனின் விதி என்று கூறினார் எமன். உடனே சாவித்ரி அங்கிருந்து விலகி நின்றார். சாவித்ரி, எமதர்மராஜாவை பார்த்து ஒரு அன்பு கணவனையும், அவனுடைய அன்பு மனைவியையும் உங்களின் மாறாத விதி பிரிக்கவே கூடாது என்று எமதர்மராஜாவிடம் வேண்டினார். உடனே எமதர்மராஜாவும் சாவித்ரியை பார்த்து உத்தமியே உனது கணவன் சத்தியவானின் உயிரை தவிர்த்து 3 வரங்களை கேள் தருகிறேன் என்று கூறினார் எமதர்மன். 

அதற்கு சாவித்ரி எமர்தர்மனிடம் தனது மாமனார்-அத்தைக்கு இழந்த நாடும், கண்பார்வையும் கிடைக்க வேண்டும் என்றும், தனது தந்தைக்கு பிறகு அரசாள்வதற்கு ஆண்வாரிசு இல்லாததால் அவருக்கு ஆண் வாரிசு வேண்டும் என்றும், போரில் பின்வாங்காத வீரமுடைய புதல்வர்கள் எனக்கு மகனாக வரவேண்டும் என்றும் கேட்டார். சாவித்ரியின் சாமர்த்தியமான பேச்சைக்கேட்ட எமதர்மன் சிறிது யோசிக்காமல் அப்படியே ஆகட்டும். தந்தேன்.... என்று கூறிவிட்டு சத்தியவானின் உடலை எடுத்துக்கொண்டு எமலோகத்திற்கு சென்றார். 

சாவித்ரியும், எமதர்மராஜாவை தொடர்ந்து பின்னாடியே போனார். எமதர்மராஜா, சாவித்ரியின் பொறுமையை கண்டு மீண்டும் மனம், இழகி சாவித்ரியை பார்த்து இன்னும் உனக்கு வரம் வேண்டுமா என்று கேட்டார். அதற்கு சாவித்ரி, எமதர்மராஜா... ஏற்கனவே நீங்கள் தந்த வரத்தில் புத்திரபாக்கியம் எனக்கு என் கணவன் இல்லாமல் எப்படி கிடைக்கும் என்று கேட்டார். அதற்கு எமதர்மராஜா தந்தேன்... என்று கூறிவிட்டு மறைந்தார். 

அதன்பிறகு சத்தியவான் உறக்கத்தில் இருந்து எழுந்தவன்போல எழுந்தார். சாவித்ரி பெற்ற வரத்தின்படி சாவித்ரிக்கும் அவரது மாமா-அத்தைக்கு இழந்த நாடும், கண்பார்வையும் கிடைத்தது. சாவித்ரியின் தந்தைக்கு ஆண் வாரிசும் கிடைத்தது. சத்தியவானும், சாவித்ரியும் வீரமிக்க புதல்வர்களை பெற்று பல்லாண்டுகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். 

இந்த கதையில் நாம் புரிந்து கொண்டது என்ன என்றால், சத்தியவான், சாவித்ரியின் அன்பு மரணத்தை வென்றுவிட்டது. உண்மையான அன்பிற்கு முன்னால் எமதர்மன் கூட ஆற்றல் அற்றவனாக மாறிவிடுவான் என்பதற்கு சத்தியவான், சாவித்ரி கதை சான்றாக உள்ளது. 
 

Share this story