நால்வர் வளர்த்த நற்றமிழ் இலக்கியங்கள்.!
 

By 
literature developed by the four

தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் ஏழு திருமுறைகள் ஆகும். 

இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள்.

பாடலாசிரியர்கள்,
முதல் இருவரும் கி.பி 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. 

தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டதாகும்.

தே-ஆரம் :

7ஆம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி, பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர் ஊராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர்.

திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில், தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. 

இவர், தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ள தோணியப்பர் மீது, 'தோடுடைய செவியன்' என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.

"தே"(தெய்வம்) மீது பாடப்பட்ட "ஆரம்" (பாமாலை) என்பதால், தேவாரம் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். 

ஆனால், இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும்.
வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது. 

முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர். திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய 'கூற்றாயினவாறு விலக்ககலீர்' என்று தொடங்கும் பதிகமே, அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும்.

நம்பியாண்டார் நம்பி :

'பித்தா பிறைசூடி' என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம். 10-ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், 

வேறு பல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக, எஞ்சியவற்றை நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை 'திருப்பாட்டு' என்றும் அழைப்பது வழக்கம். இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.

இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38,000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன. அதனால், பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன.

அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன. தேவாரங்களில் செந்துருத்திப் பண் கொண்டு பாடல்பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களை பாடவில்லை.

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.

பதிகங்கள் தொகுப்பு பண்முறை :

தேவாரம், பண் வாரியாகத் திரட்டி, ஒன்று முதல் ஏழு திருமுறையாக அடைவு செய்துள்ள முறை முதலாவதாகும். இது 'பண்முறை' எனப்படும்.

தேவார ஆசிரியர் மூவருள் இயலிசைத் தமிழாகிய திருப்பதிகங்களை முதன்முதல் அருளிச் செய்தவர் திருஞானசம்பந்தர்.

ஆதலின், அவர் அருளிய திருப்பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாகவும், அவர்தம் கெழுதகை நண்பராய் விளங்கிய திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் நான்காம் திருமுறை – ஐந்தாம் திருமுறை – ஆறாந்திருமுறை என மூன்று திருமுறைகளாகவும், 

இவ்விரு பெருமக்களும் வாழ்ந்த காலப்பகுதியையொட்டிச் சில ஆண்டுகள் பிற்பட்டுத் தோன்றிய நம்பியாரூரர் ஆகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள் ஏழாம் திருமுறையாகவும் தொகுக்கப்பட்டன.

இப்பெருமக்கள் மூவருள் முறையே ஒவ்வொருவரும் அருளிச் செய்த திருப்பதிகங்களில் அமைந்த பண்களை வகைப்படுத்தி, ஒவ்வொரு பண்ணுக்கும் உரிய திருப்பதிகங்களையும் ஏழு திருமுறைகளாக வகுத்தெழுதப்பட்டன.

திருவாசகம்-திருவெம்பாவை :

பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில், மாணி்க்கவாசகர் எழுதிய திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. 'திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்பது மூதுரை. 

பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.

திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. 

திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. 

திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. 

எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாக அமைந்துள்ளன.
*

Share this story