அருந்தமிழ் காத்திட அன்னை சரஸ்வதி, கிழங்கு விற்றாரே.!

முப்பெரும் தேவியரில் ஒருவரான சரஸ்வதிக்கு கலைமகள், பத்மாக்ஷி, விமலா, ஞானமுத்ரா, சாவித்ரி, செளதாமினி, பிரம்மி, சுபத்ரா எனப்பல பெயர்கள் உள்ளன. கலைகள் அருளும் அன்னை சரஸ்வதி பற்றிப் பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. அவைகளில் சில காண்போம்.
கம்பருக்கு அருளிய கலைமகள் :
கம்பரின் மகன் அம்பிகாபதிக்கும், சோழ மன்னன் மகள் அமராவதிக்கும் காதல் ஏற்படுகிறது.
சோழ அரசின் அவைப்புலவரான ஒட்டக்கூத்தர் அவர்கள் இருவரையும் மன்னனிடம் சிக்க வைப்பதற்காக, அரண்மனையில் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். விருந்தில் உணவு பரிமாற அமராவதி வந்தவுடன், அவரைக்கண்ட அம்பிகாபதி 'இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கு அசைய...' என்று தன்னை மறந்து பாடுகின்றார்.
இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியுடன் நோக்க சோழ மன்னனுக்கு அதீத கோபம் வருகின்றது.
உடனே கம்பர், சரஸ்வதி தேவியை மனதில் தியானித்து, தன் மகன் அம்பிகாபதியின் பாடலைத் தொடர்ந்து 'கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள் தந்நாவில் வழங்கோசை வையம் பெறும்' எனப்பாடி முடிக்கின்றார்.
இந்தப் பாடலுக்கு, சோழ மன்னன் விளக்கம் கேட்க, அதற்குக் கம்பர் வீதியில் வயதான மூதாட்டி ஒருத்தி வெயில் தாங்க முடியாமல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து, அதனால் அடி கொப்பளித்ததையும் பொருட்படுத்தாது கொட்டிக் கிழங்கு விற்றுக்கொண்டு, வீதி வழியாக வருகின்றார்
எனக்கூற, உடனே அரசன் காவலாளியை அழைத்து வீதியில் போய் உண்மை நிலையை அறிந்து வரக் கூறினார்.
கம்பரின் வார்த்தையைக் காப்பாற்ற, சரஸ்வதி தேவியே கொட்டிக் கிழங்கு விற்கும் வயோதிகப் பெண்ணாக உருவெடுத்து வீதியில் வர, காவலாளியால் அரசரின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறாள்.
தமிழைக் காக்க அன்னை சரஸ்வதியே அடிபணிகிறார் என்பதையே இக்கதை உணர்த்துகின்றது.
கன்னியாக அமர்ந்த சரஸ்வதி தேவி :
தமிழ்நாட்டில் சரஸ்வதிக்கு என்று தனியாக கோவில் உள்ள இடம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர் ஆகும். இந்த ஊரை இரண்டாம் ராஜராஜசோழன் தன் அவைப்புலவர் ஒட்டக்கூத்தருக்குத் தானமாக வழங்கியதால் கூத்தனூர் என்று பெயர் பெற்று விளங்குகின்றது.
பிரம்ம தேவரும், சரஸ்வதி தேவியும் தம்பதியாக சத்திய லோகத்தில் இருந்து அனைவருக்கும் அருள்பாலித்து வந்த பொழுது, சரஸ்வதி தேவிக்கு எல்லோருக்கும் கல்வியும், ஞானமும் வழங்குவதால் தானே உயர்ந்தவள்’ என்றும், பிரம்மதேவருக்கு படைப்புத்தொழில் செய்வதால் தானே உயர்ந்தவன்’ என்றும் எண்ணம் தோன்ற இருவரும் வாதிட்டு அது கடுமையான வாக்கு வாதமாக மாறி, ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டனர்.
பின்னர், இவர்கள் இருவரும் ஒரே பெற்றோருக்குக் குழந்தைகளாகப் பிறந்தனர். இவர்கள் திருமண வயதை அடைந்த பொழுது பெற்றோர் இவர்களுக்கு ஏற்ற வரனைத் தேடினர். அப்போது தான் இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார்? என்கின்ற விவரம் தெரிய வந்தது.
எனவே, இருவரும் சிவபெருமானைப் பணிந்து வணங்கி தங்களின் இக்கட்டான நிலையைக்கூறி, இந்த தர்மசங்கடத்தில் இருந்து விடுபட ஆலோசனை கேட்டனர்.
அப்பொழுது சிவபெருமான் 'சகோதர முறையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொள்வது முறையல்ல என்றும், சரஸ்வதி மட்டும் இங்கே கன்னியாக இருந்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கட்டும்' என்றும் கூறி மறைந்தார்.
அதன்படியே, சரஸ்வதி இங்கு கன்னி சரஸ்வதியாக கோவில் கொண்டுள்ளார்.