முத்தமிழ் முருகன் மாநாடு: பழநி கோயிலின் முக்கிய இடங்களை முப்பரிமாணத்தில் காணும் வசதி..

By 
mmm1

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலின் முக்கிய இடங்களை முப்பரிமாணத்தில் பக்தர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.

இதில், சமய பெரியோர்கள், ஆன்மிக அன்பர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின் நோக்கம் குறித்து அறியவும், மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புவோருக்கு https://palanimurugan.hrce.tn.gov.in/resources/docs/virtualtour/32203/index.html என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில், மாநாட்டின் நோக்கம், பழநி கோயில் பற்றி, மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு மாநாட்டு நிகழ்ச்சிகள், தங்கும் இடம், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இன்று (ஜூன் 21) வெள்ளிக்கிழமை காலை முதல், பழநி முருகன் கோயில் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை முப்பரிமாணத்தில் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பழநி மலை, படிப்பாதை, யானை பாதை, மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள கோயில்கள், மலைக்கோயில் உள் மற்றும் வெளிப்பிரகாரம், தங்க கோபுரம், ராஜ கோபுரம், சந்நிதிகளை முப்பரிமாணத்தில் பார்க்கும் போது நேரில் கோயிலுக்குச் சென்று சுற்றிப் பார்க்கும் உணர்வை பக்தர்களுக்கு ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story