ஸ்ரீரங்கம் கோவிலில் 4-ந்தேதி வரை நம்பெருமாள் வசந்த உற்சவம் : நிகழ்ச்சிகள் விவரம்..

By 
perumal5

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் சனிக்கிழமை தொடங்கியது.. இந்த உற்சவம் வரும் 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. 

வசந்த உற்சவத்தின் முதல் நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார். பின்னர், வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். 

வசந்த உற்சவ திருவிழாவின் 7-ம் நாளன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9-ம் நாளன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். 

பின்னர், தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார். வசந்த உற்சவத்தின்போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். 

நம்பெருமாள் வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு, ஆரியப்பட்டாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

Share this story