மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் நெல்லையப்பர் தேரோட்டம்; இன்று கோலாகலம்..

By 
nellai6

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும். நெல்லையப்பர் கோவில் பல்வேறு காலகட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் உள்ளன.

பல்வேறு சிறப்புகள் அமையப்பெற்ற சுவாமி நெல்லையப்பா் கோவிலில் ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் காலை-மாலை என 2 வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் இன்று நடை பெற்றது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் அலங்காரங்கள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இன்று காலை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தேரோட்டத்தை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து கோவிலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரகர மகாதேவா, ஓம் நமச்சிவாய என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக இன்று அதிகாலை 1.15 மணியளவில் விநாயகர் தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டு சுவாமி சன்னதி முன்பு நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு முருகர் தேர் இழுக்கப்பட்டது. பின்னர் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் சுவாமி-அம்பாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருத்தேரோட்டம் தொடங்கியது. பின்னர் 4 ரதவீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் சுவாமி நெல்லையப்பர் மிதந்து வந்தார். அப்போது விண் அதிர கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் வடக்கு ரதவீதியில் நிறுத்தப்பட்டது. அதனை தொடா்ந்து அம்பாள் தேரும், நிறைவாக சண்டிகேஸ்வரா் தேரும் பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

ரதவீதிகள் முழுமையும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தாகம் தீர்க்கவும், பசியாற்றவும் தன்னார்வலர்கள், பல்வேறு கட்சியினர் சார்பில் ரதவீதிகளில் அன்னதானம், தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

தேரோட்டத்தையொட்டி 4 ரதவீதிகளிலும் சிவனடியார்கள் சங்கொலி எழுப்பி சென்றனர். ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசகம் முற்றோதினர். பாராயணங்களும் பாடினர். சிறுவர்கள் கூட்டமாக கூடி இசை வாத்தியங்கள் வாசித்தனர். சுவாமி நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் 3-வது பெரிய தேராகும். இதன் எடை 450 டன், அகலம் 28 அடி, நீளம் 28 அடி, அலங்கார தட்டுகளை சேர்த்து உயரம் சுமார் 70 அடியாக கொண்டுள்ளது.

திருவாரூர் ஆழித்தேர் உயரத்தில் அதிகம் என்றாலும் முழுக்க முழுக்க மூங்கில் மரங்கள் பயன்படுத்தப்பட்டு ஹிட்டாச்சி எந்திரங்களும், ஹைட்ராலிக் பிரேக் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டு இழுக்கப்படுகிறது. உயரத்தில் 2-வது பெரிய தேரான திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருத்தேர் மூங்கில் பிரம்புகள் மற்றும் மரங்கள் பயன்படுத்தப்பட்டு ராட்சச எந்திரங்கள் மூலம் இழுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் நெல்லையப்பர் தேர் முழுக்க முழுக்க மனித சக்திகளால் மட்டுமே இழுக்கப்படுகிறது. தேர் இழுக்க 300 அடி நீளத்தில் 4 வடம் பயன்படுத்தப்படுவதுடன், தேர் திரும்பவும், தேரை நிறுத்தவும் சறுக்கு கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. 
 

Share this story