பழனி முருகன் தரிசனம் : முன்பதிவு கட்டாயம்..
 

By 
Palani Murugan Darshan Booking is compulsory ..

புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் இன்று முதல் திறக்கப்படுகிறது. இதையொட்டி, கோவிலில் கிருமிநாசினி தெளித்தல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றன. 

இதற்கிடையே, கோவிலுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகம் சார்பில், அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :

* கோவிலுக்கு வரும் பக்தர்கள், பழனி அடிவாரத்தில் இருந்து குடமுழுக்கு அரங்கம், படிப்பாதை வழியே மலைக்கோவிலுக்கு ஒருவழிப்பாதையாக செல்ல வேண்டும். 

* முன்னதாக, பக்தர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு இருந்தால், தரிசனத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். 

* கோவிலுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

* மேலும், தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், www.palanimurugan.hrce.tn.gov.in என்ற கோவில் இணையதள முகவரியில் இலவச, கட்டண தரிசனம் என தங்களுக்கான தரிசன முறை, தேதியை தேர்வு செய்து, முன்பதிவு செய்ய வேண்டும். 

* இணைய வசதி இல்லாதவர்கள், சாதாரண செல்போன் வைத்திருப்பவர்கள் 04545-242683 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண்ணை தெரிவித்து, முன்பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த முறையில் தரிசனத்துக்கான தேதியில், ஒருநாள் முன்னதாகப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்து வரும் பக்தர்கள், கட்டாயம் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும்.

* ஒரு மணி நேரத்துக்கு 1,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். 

* பக்தர்கள் தேங்காய், பழம், பூ ஆகியவற்றை கொண்டுவர அனுமதியில்லை. 

* காலபூஜை, அபிஷேகம் நடைபெறும்போது உபயதாரர்கள், பக்தர்கள் என யாரும் அமர்ந்து தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

* கோவிலில் அன்னதானம் பொட்டலமாக வழங்கப்படும். அதேபோல் லட்டு, பஞ்சாமிர்தம், முறுக்கு, அதிரசம், சர்க்கரை பொங்கல் ஆகிய பிரசாதங்கள் விற்பனை செய்யப்படும். ஆனால், மேற்கண்டவற்றை கோவில் வளாகத்தில் அமர்ந்து உண்ணுவதற்கு அனுமதியில்லை.

* கோவிலில் மின்இழுவை ரயில் மட்டும் நாளை முதல் செயல்படும். ரோப்கார் சேவை இல்லை. 

* பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக, கோவிலில் வரையப்பட்டுள்ள குறியீட்டுகளில் நின்று தரிசனம் செய்ய வேண்டும். 

* தங்கரதம், தங்கத்தொட்டில் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

* முடிக்காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள், முடிக்காணிக்கை நிலையத்தில் தங்களது இருப்பிட விவரம், தொலைபேசி எண்ணை தெரிவிக்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் சாமி தரிசனம் மற்றும் முடிக்காணிக்கை செலுத்த வருவதை தவிர்க்க வேண்டும். 

* மேலும், அரசின் கொரோனா விதிகளை பக்தர்கள் அனைவரும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*

Share this story