பழனி தைப்பூச திருவிழா : கொட்டும் மழையிலும், லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம்..

By 
pazhani2

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, கடந்த ஜனவரி 29-ந்தேதி பெரியநாயகி அம்மன்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்தவண்ணம் உள்ளனர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் பழனிக்கு சென்றனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் மலைக்கோவில், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டுள்ளதால், கோவிலில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து வெள்ளிரதத்தில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிவீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 

திருவிழாவின் உச்சபட்ச நிகழ்வான தைப்பூச தேரோட்டம் நேற்று மாலை 4.30 மணிக்கு ரதவீதியில் நடைபெற்றது. மேலும், அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது . 

இதனைதொடர்ந்து பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக் காண அலைகடலென பழனியை நோக்கி பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். 

பழனி கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்றது. அதில் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். இதனால், தைப்பூச திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் வந்தவண்ணம் உள்ளனர். 

பக்தர்கள் பாதுகாப்புக்காக டி.ஐ.ஜி தலைமையில் 3 எஸ்.பிக்கள், 24 டி.எஸ்.பிக்கள் கொண்ட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த தற்காலிக பஸ்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பக்தர்களை அழைத்துவர 30 வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டு மலைகோவில் வரை இயக்கப்படுகிறது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாத சாரல்மழை மற்றும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் பாதயாத்திரை பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இருந்தபோதும் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில், கொட்டும் மழையிலும் பழனியை நோக்கி நடந்து சென்றனர். 

பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் விட்டுவிட்டு சாரல்மழை பெய்து வந்தபோதிலும், அதனையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். 

Share this story