பழநி - திருப்பதிக்கு ஆன்மிகச் சுற்றுலா: வாரம் ஒருமுறை பேருந்து இயக்கம்; முழு விபரம்..

By 
tirupati18

பழநியில் இருந்த திருப்பதிக்கு ஆன்மிகச் சுற்றுலா செல்ல தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பேருந்தை இயக்க உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழகம் பேருந்தை இயக்கி வருகிறது. இதையடுத்து ஆன்மிக சுற்றுலாவாக பழநியில் இருந்து திருப்பதிக்கு பேருந்தை இயக்க முடிவு செய்துள்ளது. 

இந்தப் பேருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு பழநியில் இருந்து புறப்பட்டு, திண்டுக்கல் வழியாக சனிக்கிழமை காலை ராணிப்பேட்டை சென்றடையும்.

ராணிப்பேட்டையில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்களை தயார் செய்து கொண்டு, திருப்பதிக்கு சுற்றுலா பயணத்தை தொடருவர். திருப்பதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கியுள்ள விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலமாக சுற்றுலா பயணிகள் தரிசனம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும்.

பேருந்தில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்கு திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படும். தரிசனம் முடித்து மதிய உணவுக்கு பின் திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரை தரிசனம் செய்த பிறகு, ராணிப்பேட்டையில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் இரவு உணவு வழங்கப்படும். அங்கிருந்து சுற்றுலா பயணிகள் பயணத்தை தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பழநி வந்தடையலாம்.

இந்த சுற்றுலா பயணத்திற்கான கட்டணம் குழந்தைகளுக்கு ரூ.4,600, பெரியவர்களுக்கு ரூ.5,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை 3 வேளை உணவு மற்றும் சிறப்பு தரிசன கட்டணம் உள்ளிட்டவை இதற்குள் அடங்கும். 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திருப்பதி சுற்றுலா பயணத்திட்டத்திற்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com என்ற இணையதளத்திலும் அல்லது நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம்.

திருப்பதி சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தொலைபேசி எண்கள் (1800 4253 1111 (Toll free), 044 - 2533 3333 மற்றும் 044 - 2533 3444) வாயிலாக தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.

Share this story