பாவத்தை நீக்கும் பாபநாச தலம்

திருநெல்வேலி மாவட்டம் நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டு, தென்காசி மாவட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வகையில், சிவாலயத்தில் சிறப்புப் பெற்ற ஊரான பாபநாசம், தென்காசி மாவட்டத்தில் உள்ளது.1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான பாவநாசம் திருக்கோயில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், சந்தனச் சோலைகளும், மூலிகைகளும், நிறைந்து, தென்றலின் பிறப்பிடமாய்த் திகழும் பொதிகை மலை உச்சியில், தாமிரபரணி உற்பத்தியாகி பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமையப்பெற்றுள்ளது.
பாவநாச தலத்தின் இறைவன்- இறைவி பாவவிநாச நாதர், உலகாம்பிகை ஆவர். இங்கு பாபநாசம் அணையும் அமைந்துள்ளது.
இங்கே முன்னோர்க்கு தர்ப்பணம் செய்து வேண்டுதல், அனைவருக்கும் அன்னதானம் இடுதல் என பல்வேறு வழிபாடுகள் மனமுருக நடைபெற்று வருகிறது. பாவ அழிவு, பாவநாசம் ஆனது. இச்சொல் மருவி, பாபநாசம் என அழைக்கப்படுகிறது.
சித்திரை 1-ந்தேதி : புராண வரலாற்றின்படி, இறைவன் சிவனுக்கும் பார்வதிக்கும் கயிலை மலையில் நடந்த திருமணத்தை அகத்தியர் காண முடியாமல் போனது. இறைவனின் திருமணக் கோலத்தைக் காண விரும்பி, அகத்தியர் இறைவனை வேண்டினார்.
அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம், அகத்தியருக்கும் அவரின் மனைவி லோபமுத்திரைக்கும் பாபநாசம் தலத்தில் இறைவன், தன் இறைவியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளித்தார்.
இன்றும் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 1- ந்தேதி அகத்தியருக்கு காட்சி தந்த சிவன்- பார்வதி வைபவம், வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இக்கோயிலுக்கு அருகிலுள்ள அருவி அகத்தியர் அருவி என அழைக்கப்படுகிறது.
நவமலர்களும், நவகோள்களும் : மற்றொரு மரபு வரலாற்றில், உரோசம முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டு, அம்மலர்கள் கரைசேர்ந்த இவ்விடங்களில் சிவாலயங்கள் அமைந்து சிவனை வழிபட்டதாகவும், அவற்றில் முதலாவது மலர் கரைசேர்ந்த பாபநாசத்தில் அமைத்த கோயில் பாபநாசநாதர் கோயிலெனக் கூறப்பட்டுள்ளது.
இக்கோயில், சிவ வடிவான லிங்கமானது, நவகோள்களில் ஒன்றான சூரிய தேவனின் அம்சமாக கருதப்படுகிறது.
கைலாய நாதரை முதன்மைக் கடவுளாகக் கொண்டு, நவகோள்களுக்குரியவையாக தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவ கைலாய கோயில்களின் வரிசையில், முதலாவதான இக்கோயில் சூரியனுக்கு உரியதாகும்.