திருவொற்றியூரில் பட்டினத்தார் முக்தி : அரிய தகவல்கள்..

பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான பட்டினத்தார், திருவொற்றியூருக்கு வந்து திருவருள் பெற்று கடற்கரை ஓரத்தில் உயிரோடு ஜீவ சாமாதியான சித்தர். காவிரிபூம்பட்டினத்தில் நகரத்துச் செட்டியார் மரபில் தோன்றியவர் திருவெகாடர்,
திருமணமான பின் மகப்பேறு இன்றி சிவனிடம் முறையிட்டதால் திருவிடைமருதூர் ஈசனே மருதவாணர் என்ற பெயரில் வளர்ப்பு மகனாக வந்தார், வளர்ந்தார், கடல் கடந்து வணிகம் செய்து திரும்பி வந்தார். வறட்டிகளோடு ஒரு கிழிந்த ஓலையையும் தந்து மறைந்தார்.
"காதற்றஊசி வாராது காணும் கடை வழிக்கே" என்ற உண்மையை அந்த ஓலை உணர்த்தியது. சிவனைத் தவிர எல்லா செல்வமும் பொய் என்ற ஞானம் பெற்றார். செல்வம், மனைவி, உறவு யாவற்றையும் துண்டித்துக் கொண்டு துணையோடு துறவு பூண்டார்.
கோவில் தோறும் இறைவனை வழிபட்டு தான் பெற்ற ஞானத்தை பாடினார். சுவையற்றபேய்க் கரும்பு இனித்த இடமாகிய திருவொற்றியூர் தனக்கு முக்தி தரும் இடம் என இங்கு வந்து கடற்கரை அருகே சித்துக்கள் செய்தார்.
"பட்டினத்தார் உலகையே துறந்தவர். அவரைப் போல அனைத்தையும் துறந்தவர் பூவுலகில் யாரும் இல்லை" என்று தாயுமானவர் பாடியுள்ளார். அத்தகைய பட்டினத்தார் முக்திபெற்ற இடம் திருவொற்றியூர். இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார். பக்திரசம் சொட்டச் சொட்ட பல பாடல்கள் பாடினார்.
திருவொற்றியூரில் தெருவில் நடந்து போனேன் காலடி மண்ணை நெற்றியில் திருநீறாக பூசினால் பிறவி நோய்க்கும் அருமுருந்தாகும் என்று பட்டினத்தார் பாடலில் கூறியுள்ளார். பட்டினத்தார் இந்த ஊரில் மீனவச் சிறுவர்களுடன் விளையாடினார். மணலைத் தோண்டி அதில் தன்னை புதைக்கச் செய்தார். வேறு இடத்தில் இருந்து வெளியில் வந்தார். இதுபோல 2 முறை செய்தார். 3வது முறையும் புதைத்தபோது அவர் வெளியே வரவில்லை.
தோண்டி பார்க்கும்போது இறைவனடி சேர்ந்து லிங்கமாக காட்சி தந்தார். திருவொற்றியூர் இறைவனை பாடி அர்ச்சனை செய்ய ஏதுவாக 28 போற்றி பாடல்கள் பாடியுள்ளார்.
முடிவாக ஜீவ சமாதியாக கடற்கரை அருகில் சிவலிங்க வடிவாகவே ஆனார். இவரது சமாதிக் கோவில் திருவொற்றியூர் கடற்கரை சாலை அருகே இன்றும் உள்ளது.