முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் : மாற்று வழி ஐதீகம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் எதிரே உள்ள அக்னி தீர்த்தக் கடல் மற்றும் கோவிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளிலும் புனித நீராடினால், தோஷங்கள் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ராமேஸ்வரம் தலத்துக்கு ஆடி, தை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் வந்து, அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால், முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதனால், இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் கூடுவர்.
இதேபோல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளிலும் திதி, தர்ப்பண பூஜை நடைபெறும்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மகாளய அமாவாசையான இன்று, முன்னோர்கள் நினைவாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்நாளில், தர்ப்பண பூஜையை நீர்நிலைகளுக்கு சென்று செய்ய முடியாத நிலை உள்ளது.
எனவே, ஊரடங்கால் கடல் மற்றும் ஆறுகளில் நீராடி தர்ப்பண பூஜை செய்ய முடியாத பக்தர்கள், தங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய தங்கள் வீட்டிலேயே அதிகாலையில் எழுந்து குளித்து, விரதம் தொடங்கி, மதியம் சாப்பிடுவதற்கு முன்பு பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கலாம்.
மேலும், காகங்களுக்கு சாதம் வைத்தும், ஆதரவற்றோருக்கு உணவும் அளிக்கலாம்.
கடவுளை வேண்டி வழிபட்ட பின்பு, மதிய உணவு சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம்.
இதன் மூலம், தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என்பது ஐதீகம்.